மு.க.ஸ்டாலின், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் 2 நீதிபதிகளுக்கு மேல் அடங்கிய அமர்வுக்கு மாற்றம்


மு.க.ஸ்டாலின், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் 2 நீதிபதிகளுக்கு மேல் அடங்கிய அமர்வுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 2 Nov 2017 11:55 PM GMT (Updated: 2 Nov 2017 11:55 PM GMT)

மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்குகள் அனைத்தையும் 2 நீதிபதிகளுக்கு மேல் அடங்கிய அமர்வுக்கு மாற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னருக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க. செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதேபோன்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த 2 வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த தனி நீதிபதி, ‘ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது. அதேபோன்று மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது’ என்று உத்தரவிட்டார்.

இந்தநிலையில் நேற்று அந்த வழக்குகள் நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, இந்த வழக்குகள் மட்டுமல்லாமல் இதே கோர்ட்டில் நிலுவையில் உள்ள சட்டமன்றத்துக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை எடுத்து சென்றதால் சட்டமன்றத்தின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி மு.க.ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டமன்ற உரிமைக்குழு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கு, குட்கா விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்பட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து சட்டமன்ற செயலாளர் தாக்கல் செய்த வழக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 18–ந் தேதி சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசு கொறடா உத்தரவை மீறி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு, இதே கோரிக்கையை வலியுறுத்தி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் உள்பட 3 பேர் தொடர்ந்த வழக்கு, அரசு கொறடா உத்தரவை மீறி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்–அமைச்சர் பதவியும், கே.பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது சட்டவிரோதம் என்று கூறி எந்த அடிப்படையில் அவர்கள் இருவரும் பதவியில் நீடிக்கின்றனர் என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி தொடர்ந்த வழக்கு ஆகியவை சபாநாயகர் மற்றும் கவர்னரின் அதிகார வரம்புக்குள் வருவதால் இந்த வழக்குகளை 2 நீதிபதிகளுக்கு மேல் அடங்கிய அமர்வு விசாரிப்பது தான் சரியாக இருக்கும் என்றார்.

இதன்பின்பு, இந்த அனைத்து வழக்குகளையும் 2 நீதிபதிகளுக்கு மேல் அடங்கிய அமர்வு விசாரணைக்காக பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார்.

இந்த வழக்குகளை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்குமா அல்லது 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்குமா என்பது குறித்தும், வழக்கை விசாரிக்கப்போகும் நீதிபதிகள் யார் என்பது குறித்தும், அந்த விசாரணை எப்போது தொடங்கும் என்பது குறித்தும் தலைமை நீதிபதி முடிவு செய்வார். அதன்பின்பு, இந்த வழக்குகளின் விசாரணை தொடங்கும்.


Next Story