ப.சிதம்பரம் உறவினர் வீடுகள், அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை


ப.சிதம்பரம் உறவினர் வீடுகள், அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 1 Dec 2017 11:00 PM GMT (Updated: 1 Dec 2017 7:20 PM GMT)

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை,

அன்னிய நேரடி முதலீடு அனுமதி வழங்கியது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவர் தேடப்படும் நபராக கருதி வெளிநாடு செல்வதற்கு அமலாக்கப்பிரிவு தடை விதித்து இருந்தது.

இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாலும் வழக்கு அவருக்கு சாதகமாக அமையவில்லை. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து வெளிநாடு செல்வதற்கு இருந்த தடையை உடைத்தார்.

இந்த நிலையில், அன்னிய நாட்டு நேரடி முதலீடு அனுமதி வழங்கப்பட்டது குறித்து ஏதேனும் முக்கிய ஆவணங்கள் இருக்குமா? என்ற நோக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகள், அலுவலகங்களில் டெல்லி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று அதிகாலையில் இருந்து அதிரடி சோதனையில் ஈடுபட தொடங்கினார்கள்.

சென்னை மற்றும் கொல்கத்தாவில் உள்ள ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. சென்னையில் திருவான்மியூர், ஸ்ரீராம் நகரில் சுஜய் சம்பமூர்த்திக்கு சொந்தமான மீடியா மேக்னட் பிசினஸ் சர்வீசஸ் அலுவலகத்திலும், ஆழ்வார்ப்பேட்டை, முரேஸ் கேட் சாலையில் ராம்ஜி நடராஜனுக்கு சொந்தமான டிராவல் மாஸ்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

அதேபோல், தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் சடயவேல் கைலாசத்துக்கு சொந்தமான வீடு, அதேபகுதியில் உள்ள அஸ்வினி சவுந்திரா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திலும் என மொத்தம் சென்னையில் 4 இடங்களில் அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர். சடயவேல் கைலாசம், கார்த்தி சிதம்பரத்தின் தாய்வழி உறவினர் ஆவார்...

இதேபோல் கொல்கத்தாவில் மனோஜ் மோகன்காவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது அஸ்வினி சவுந்திரா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் பைகளில் எடுத்து சென்றனர்.

ஏற்கனவே சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:–

கடந்த 2006–ம் ஆண்டில் ஏர்செல்–மேக்சிஸ் நிறுவனங்களுக்கு அப்போது மத்திய மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் முறைகேடாக நேரடி அன்னிய முதலீடு அனுமதி வழங்கியது தொடர்பாகவும், குர்கானில் இருந்த ஒரு இடத்தை கார்த்தி சிதம்பரம் விற்று இருக்கிறார். அந்த இடத்தில் வாடகைக்கு இருந்த சர்வதேச நிறுவனத்துக்கு அன்னிய நேரடி முதலீடு செய்ய கடந்த 2013–ம் ஆண்டு அனுமதி வழங்கியது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பான ஆவணங்கள் இவர்களின் உறவினர் வீடுகள், அலுவலகங்களில் இருக்கலாம் என்ற நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.Next Story