கேரள பாதிரியாரிடம் ரூ.3.12 லட்சம் கொள்ளையடித்த சென்னை வாலிபர்


கேரள பாதிரியாரிடம் ரூ.3.12 லட்சம் கொள்ளையடித்த சென்னை வாலிபர்
x
தினத்தந்தி 2 Dec 2017 11:30 PM GMT (Updated: 2 Dec 2017 9:25 PM GMT)

கேரள பாதிரியாரிடம் ரூ.3.12 லட்சம் கொள்ளையில் ஈடுபட்ட சென்னை வாலிபரை பிடிக்க கேரள போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

சென்னை,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூரில் உள்ள செயின்ட் மேரீஸ் கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியார் கடந்த 25–ந்தேதி அவருடைய அறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் மற்றும் டிஜிட்டல் கேமரா, லேப்–டாப், செல்போன் என மொத்தம் ரூ.3.12 லட்சம் மதிப்பிலான பொருட்களும் கொள்ளைபோனது.

மயக்கம் தெளிந்த பின்னர் பாதிரியார் இதுதொடர்பாக மறையூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘எனக்கு இதயநோய் உள்ளதால் சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூர் டாக்டர் ஹேமந்த், அவருடைய நண்பர் சுகதேவ் ஆகியோர் என்னுடைய அறையில் தங்கியிருந்தனர். அவர்கள் தான் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்’ என்று தெரிவித்தார். அதன்பேரில் மறையூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அஜய்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

கேரள போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. பாதிக்கப்பட்ட பாதிரியார் ‘பிளானட் ரோமியோ’ என்ற ஓரினச்சேர்க்கையாளர்களின் இணையதள குழுவில் உறுப்பினராக உள்ளார். அந்த குழுவில் சிங்கப்பூர் டாக்டர் ஹேமந்த் என்ற பெயரில் பதிவு செய்திருந்த நபரை ஓரினச்சேர்க்கைக்கு பாதிரியார் அழைத்துள்ளார்.

அதன்படி அந்த நபர் அக்டோபர் 24–ந்தேதி இரவு பாதிரியாரின் அறைக்கு தன்னுடைய நண்பருடன் சென்றார். முதலில் டிபன் சாப்பிடுவோம் என்று அந்த நபர் கூறியதால் சப்பாத்தி, குருமா ஏற்பாடு செய்யப்பட்டது. பாதிரியார் கை கழுவ சென்றபோது அவருக்கு வைத்திருந்த குருமாவில் ஹேமந்த் மயக்க மருந்தை கலந்தார். அந்த சப்பாத்தி குருமாவை சாப்பிட்ட பாதிரியார் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார்.

பின்னர் பாதிரியார் அறையில் இருந்த பணம், பொருட்களை 2 பேரும் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. முதலில் அவமானம் கருதி போலீசாரிடம் பொய்யான புகாரை தெரிவித்த பாதிரியார், பின்னர் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டார்.

ஹேமந்த் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரித்தபோது, அந்த எண் சென்னை கிண்டியில் பணியாற்றும் கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த என்ஜினீயர் ஒருவருடைய பெயரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் போலீசார் விசாரித்தபோது, தன்னுடைய செல்போன் காணாமல்போய் 3 மாதங்கள் ஆகிவிட்டது என்றார்.

அந்த செல்போனின் 3 மாத செயல்பாடுகளை ‘சைபர் கிரைம்’ போலீசார் உதவியுடன் கேரள போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது செப்டம்பர் மாதம் 10–ந்தேதி அந்த செல்போனில் இருந்து கோவையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவன ஊழியருக்கு அடிக்கடி அழைப்பு சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மறையூர் தனிப்படை போலீசார் கோவை சென்று அந்த ஊழியரிடம் விசாரித்தனர். இதில், பாதிரியாரிடம் ஹேமந்த் என்று அறிமுகமான நபர் அவரிடம் ரகு என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறார். கோவை ஈஷா மையத்தில் தன்னார்வலராக இருப்பதாக கூறி பாதிரியாரிடம் மோசடி செய்த அதே பாணியில் அவரிடம் 2 பவுன் நகைகள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்று இருக்கிறார்.

கேரள போலீசார் ஈஷா யோகா மையத்தில் விசாரித்தபோது, அதுபோன்ற நபர் யாரும் இல்லை என்று கூறிவிட்டனர். இதே பாணியில் திருப்பூரை சேர்ந்த என்ஜினீயர் ஒருவரிடம் கொள்ளை நடந்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, கொள்ளையடித்த நபரின் புகைப்படம் கிடைத்தது.

பாதிக்கப்பட்ட பாதிரியார் மற்றும் கோவை ஊழியர் அந்த புகைப்படத்தில் இருப்பவர் தான் தங்களிடம் கைவரிசை காட்டியவர் என்று அடையாளம் காட்டினர். இதற்கிடையே அந்த நபரின் செல்போன் அக்டோபர் 1–ந்தேதி முதல் 21–ந்தேதி வரை சென்னை அரும்பாக்கம் ஜெய் நகரில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

முகப்பேரில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுவதாக ‘முகநூலில்’ அந்த நபர் பதிவிட்டுள்ளார். போலீசார் அந்த ஆஸ்பத்திரியில் விசாரித்தபோது அதுவும் பொய்யான தகவல் என்று தெரிந்தது. அரும்பாக்கம் பகுதியில் குற்றவாளி பதுங்கி இருக்கலாம் என்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கேரள போலீசார் அந்த பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

அங்கு ஒரு லாட்ஜில் சேலத்தை சேர்ந்த ஓரினச்சேர்க்கை பழக்கம் உள்ள ஒருவர் அறை எடுத்து தங்கியிருப்பது தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது, அந்த நபரை தானும் பார்த்து இருப்பதாகவும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மெரினா கடற்கரையில் ஓரினச்சேர்க்கை பழக்கம் உள்ளவர்கள் கூடுவதாகவும், அங்கு அந்த நபரையும் பார்க்கலாம் என்றும் தெரிவித்தார். இதனால் மெரினா கடற்கரையையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

இதுகுறித்து மறையூர் சப்–இன்ஸ்பெக்டர் அஜய்குமார் கூறியதாவது:–

போலீசாருக்கு எந்த தடயங்களும் கிடைக்காத வகையில் கொள்ளை சம்பவங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. கேரளா, சென்னை, விழுப்புரம், சேலம், திருப்பூர், கோவை என பல்வேறு இடங்களில் ஓரினச்சேர்க்கை பழக்கம் கொண்ட தனியாக வசிக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி நடந்துள்ளது.

போலி பெயர், போலி செல்போன் எண்ணை பயன்படுத்தி நூதன முறையில் குற்றவாளி கைவரிசை காட்டி உள்ளார். குற்றவாளி சென்னையில் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளதால் சென்னை போலீசார் உதவியுடன் குற்றவாளியை விரைவில் கைது செய்வோம்.

சம்பந்தப்பட்ட இணையதள குழுவை ஆய்வு செய்தபோது தொழில் அதிபர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள் அதில் உறுப்பினர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. அவமானம் கருதி பாதிக்கப்பட்ட பலர் போலீசில் புகார் அளிக்கவில்லை. எனவே குற்றவாளி பிடிபட்டால் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story