மாநில செய்திகள்

முதியோர் இல்லத்தில் பிணங்கள்: நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் + "||" + Corpses In the elderly home The court must order the inquiry

முதியோர் இல்லத்தில் பிணங்கள்: நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

முதியோர் இல்லத்தில் பிணங்கள்: நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
முதியோர் இல்லத்தில் பிணங்கள் வைக்கப்பட்டு இருப்பது குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று வைகோ, சீமான் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

காஞ்சீபுரம் மாவட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்கின்ற தனியாருக்கு சொந்தமான தொண்டு நிறுவனம், 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கடந்த 20–ந் தேதி, செவ்வாய்க்கிழமை அந்த தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான போலி ஆம்புலன்ஸ் வாகனத்தில், திண்டுக்கல் கூவாகம் பகுதியை சேர்ந்த அன்னம்மாள் என்ற மூதாட்டி, திண்டுக்கல்லை சேர்ந்த முதியவர் செல்வராஜ், அவர்களுக்கு அருகில் ஒரு சடலம் துணியால் சுற்றிவைக்கப்பட்டு, காய்கறி, அரிசி மூட்டைகளுடன் எந்த ஆவணமும் இல்லாமல் கடத்தப்படுவதை அறிந்த பொதுமக்கள் சாலவாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் கூறி காவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்தச் செய்தியை அறிந்த மக்கள் அச்சத்துடன் சாலவாக்கம் காவல்நிலையம் முன் திரண்டு, தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குரல் கொடுத்தனர். ஆனால் காவல்துறை, குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, நியாயம் கேட்டு போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகம் செய்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர். தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது என்று கூறி, குரும்பிறை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற அப்பாவி இளைஞரை காவல் நிலையத்தில் பிடித்து வைத்தனர்.

இதை அறிந்து, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. அவைத் தலைவர் ஜி.கருணாகரன், காஞ்சி தெற்கு மாவட்ட தி.மு.க. தொண்டர் அணி துணை அமைப்பாளர் தாஸ் ஆகியோர் காவல்நிலையம் சென்று, தங்கள் கிராமத்து இளைஞனை விடுவிக்கக் கோரினர். ஆனால் காவல்துறை அதிகாரி அவர்களைத் தரக்குறைவாகப் பேசி அவமதித்ததோடு, அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, 21.02.2018 அன்று உத்திரமேரூர் சார்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் செங்கல்பட்டு சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

பாலேஸ்வரம் கிராமம் ஒரு மர்ம பிரதேசமாக, மரண வியாபாரத்தின் பரிசோதனைக் கூடமாக இருக்கின்றது. எனவே, தமிழக அரசு பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு, பிணக்குவியல்கள் அடங்கிய பாதாள அறையைத் திறந்து, சோதனை செய்ய வேண்டும்; மேலும் பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பாலேஸ்வரத்தில் உள்ள ஜோசப் கருணை இல்லமானது முறையான அனுமதியின்றி இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு இறக்கும் முதியவர்களின் சடலங்களை அடக்கம் செய்யாது சிமெண்ட் கல்லறைகளில் வைத்து மூடிவிடுகிற வடிவில் அமைக்கப்பட்டுள்ள லாக்கர் அறையானது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்து இருக்கிறது.

அங்குள்ள முதியவர்கள் கொலை செய்யப்பட்டு அவர்களின் எலும்புகளை இவ்வறைகளில் வைக்கப்பட்டு, எலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனவே முறையான அனுமதியின்றி செயல்பட்டு வரும் இக்கருணை இல்லத்தின் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அங்குள்ளவர்களை மீட்க வேண்டும். நடைபெற்ற மரணங்கள் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும். வெளிநாடுகளை போல தமிழக அரசே முதியோர் இல்லங்களை நிறுவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.