மதுரை: 120 ஜோடிகளுக்கு திருமணம் எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர்


மதுரை: 120 ஜோடிகளுக்கு திருமணம் எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர்
x
தினத்தந்தி 30 March 2018 5:29 AM GMT (Updated: 30 March 2018 5:29 AM GMT)

ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி, மதுரை அம்மா திடலில் 120 ஜோடிகளுக்கு திருமணத்தை முதலமைச்சர் பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர். #EdappadiPalaniswami #TNCM #OPS

மதுரை, 

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின்  70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு,  ஜெயலலிதா பேரவை சார்பில்  பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன் முத்தாய்ப்பாக  120  ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக  மதுரை  ரிங்ரோடு அம்மா திடலில் பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை  மதுரை  வந்தார். 

அவரை விமான  நிலையத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, ஆர்.பி. உதயகுமார்  ஆகியோர்  பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

விழா மேடைக்கு சென்ற  முதல்-அமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமி,  120  ஜோடிகளின் திருமணத்தை  நடத்தி வைத்தார். மணமகன்களுக்கு தங்க மோதிரத்தை வழங்கி, திருமாங்கல்யத்தை அவர் எடுத்து கொடுத்தார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மணமகள்களுக்கு  தாலி கொடியுடன் இணைக்கும் தங்க  காசுகளை வழங்கினார். அதன் பின்னர்  120  ஜோடிகளுக்கும்  70 வகை  திருமண  சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.’

திருமணம் முடிந்ததும் மணமக்களுடன்  அமர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உணவு சாப்பிட்டனர்.   திருமண விழாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story