இலங்கை சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் - மு.க.ஸ்டாலின் கவலை


இலங்கை சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் - மு.க.ஸ்டாலின் கவலை
x
தினத்தந்தி 27 Dec 2019 6:16 AM GMT (Updated: 27 Dec 2019 6:16 AM GMT)

இலங்கையில் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்பது கவலையளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி, அந்நாட்டின் 72-வது சுதந்திர தின விழா  கொண்டாடப்படுகிறது. வழக்கமாக சுதந்திர தினத்தன்று சிங்களம், தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு வந்த நிலையில், வரும் ஆண்டு சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று அந்நாட்டு நில மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருக்கும்போதும், ஒரே மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடப்படுவதை போன்று இலங்கையிலும் ஒரு மொழியில் மட்டும் இனி தேசிய கீதம் பாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பிற்கு இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் அரசியல் தலைவர்கள் இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 

“இலங்கையில் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்பது கவலையளிக்கிறது.

இத்தகைய செயல்பாடுகள் இலங்கையில் வாழும் தமிழர்களை மேலும் ஒதுக்கி வைக்கும்.

இந்திய பிரதமர் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக இதில் தலையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Next Story