ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: கொரோனா வைரசை தடுக்க என்ன நடவடிக்கை? - அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: கொரோனா வைரசை தடுக்க என்ன நடவடிக்கை? - அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 March 2020 9:45 PM GMT (Updated: 2020-03-13T01:55:38+05:30)

ஐ.பி.எல். போட்டிகளின்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்று அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், அலெக்ஸ் பென்சிகர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இதனால், உலகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் பொதுநிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்படுகிறது. இத்தாலியில் கால்பந்து விளையாட்டை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கவில்லை. விரைவில் தொடங்க இருந்த ஒலிம்பிக் போட்டியும் தள்ளிவைக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் வருகிற 29-ந்தேதி முதல் மே மாதம் 24-ந்தேதி வரை ஐ.பி.எல். டி.20 கிரிக்கெட் போட்டி நடத்த உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள வெளிநாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் வர உள்ளனர். இந்த போட்டியை காண சுமார் ரசிகர்கள் 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் வரை மைதானத்தில் ஒன்று கூடுவர். இதனால், கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களிடம் இருந்து பிறருக்கு பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே, இந்த கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்கும்போது கொரோனா வைரஸ் கிருமி பரவாமல் தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் தாக்கல் செய்யவேண்டும்’ என்ற உத்தரவிட்டனர். விசாரணையை 23-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story