‘நீட்' தேர்வுக்கு எதிரான தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை: அண்ணாமலை


‘நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை: அண்ணாமலை
x
தினத்தந்தி 13 Sep 2021 6:33 PM GMT (Updated: 13 Sep 2021 6:33 PM GMT)

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூகநீதி காக்கும் ‘நீட்' தேர்வை, ஏழை மாணவர்களுக்கு உதவும் ‘நீட்' தேர்வை, பணத்தால் மருத்துவ படிப்பை வாங்கமுடியாமல் செய்த ‘நீட்' தேர்வை, தமிழக மாணவர்களுக்கு அதிக இடம் பெற்றுத்தரும் ‘நீட்' தேர்வை அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக நீக்க வேண்டும் என்ற தி.மு.க. போன்ற கட்சிகளின் பேச்சை கேட்பது நல்லதா என்று வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும். ‘நீட்' தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி வழக்கு தொடுத்தாலும், கோர்ட்டு அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. மத்திய அரசை கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்ற ஒற்றைக் கொள்கையில் மாணவர்கள் நலனுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலுக்கு எதிராக, பாராளுமன்ற அவைகளில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது அறிவுடமை ஆகுமா என்று சிந்தியுங்கள்.

தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தீர்மானம், விவசாயிகள் நலன் காக்கும் சட்டத்தை எதிர்த்து தீர்மானம், தற்போது ‘நீட்' தேர்வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவதால் சிறுபான்மையினருக்கோ, விவசாயிகளுக்கோ, மாணவர்களுக்கோ ஒரு பயனும் இல்லை. சட்டமன்றத்தின் காலத்தையும், மக்கள் வரிப்பணத்தையும் விரயமாக்கி தங்கள் பொய்யான வாக்குறுதிகளை கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி தி.மு.க. தன் கண்களை மூடிக்கொள்ளும். மக்கள்தான் விழித்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story