கர்ப்பமாக்கிய காதலியை கோர்ட்டு வளாக கோவிலில் திருமணம் செய்த காதலன்


கர்ப்பமாக்கிய காதலியை கோர்ட்டு வளாக கோவிலில் திருமணம் செய்த காதலன்
x
தினத்தந்தி 4 Oct 2021 8:27 PM GMT (Updated: 4 Oct 2021 8:27 PM GMT)

புதுக்கோட்டையில், கர்ப்பமாக்கிய காதலியை கோர்ட்டு வளாக கோவிலில் காதலன் திருமணம் செய்து கொண்டார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் வடக்குப்பட்டி வடகாடு பகுதியை சேர்ந்தவர் ராம்கி (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கி உள்ளார். ஆனால் திருமணம் செய்ய மறுத்ததால் ராம்கி மீது ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அந்த இளம் பெண் புகார் கொடுத்தார். அப்போது அவர் 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. ராம்கி மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

இந்த வழக்கு ஆலங்குடியில் உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்பின் இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ராம்கி இடைக்கால ஜாமீனில் இருந்து வந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறியிருக்கிறார். ஆனால் திருமணம் செய்யாததால் அவர் மீண்டும் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் ராம்கி மனு தாக்கல் செய்துள்ளார்.

திருமணம்

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று ராம்கி மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்ப்பமான பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கோர்ட்டு வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு ராம்கி தனது காதலிக்கு தாலி கட்டினார். அப்போது அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், வக்கீல்கள் உடன் இருந்தனர். திருமணம் முடிந்த பின் ராம்கி சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story