‘இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் குறைந்து வருகிறது’ - டிரம்ப் பேட்டி


‘இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் குறைந்து வருகிறது’ - டிரம்ப் பேட்டி
x
தினத்தந்தி 17 Sep 2019 11:30 PM GMT (Updated: 17 Sep 2019 11:11 PM GMT)

“இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றம் குறைந்து வருகிறது” என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன்,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த மாதம் 5-ந் தேதி அதிரடியாக ரத்து செய்தது.

அத்துடன் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக்கி தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

இது பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை சர்வதேச நாடுகளிடம் எடுத்துச்செல்வதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தீவிரமாக இருக்கிறார். இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி வரும் 22-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

22-ந் தேதி ஹூஸ்டன் நகரில் ‘மோடி நலமா?’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு ஆகி உள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் பங்கேற்கிறார்.

இதை நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய டிரம்ப் உறுதி செய்தார்.

அப்போது அவர், “பிரதமர் மோடியை சந்திக்கிறேன். பாகிஸ்தான் பிரதமரையும் சந்தித்து பேசுகிறேன்” என குறிப்பிட்டார்.

ஆனால் பாகிஸ்தான் பிரதமரை சந்திப்பது எப்போது என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

இருப்பினும் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின்போது இம்ரான்கானை டிரம்ப் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரைப் பற்றியோ, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்கிய பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றம் பற்றியோ குறிப்பிடாத டிரம்ப், “அங்கு பதற்றம் குறைவதில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது” என்று மட்டும் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் பிரான்ஸ் சென்றிருந்தபோது டிரம்பை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது அவர் டிரம்பிடம், “இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து பிரச்சினைகளும் இயல்பாகவே இரு தரப்பு பிரச்சினைகள்தான். இதில் மூன்றாவது நாட்டை நாங்கள் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. நாங்கள் இரு தரப்புமே விவாதித்து, பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வோம்” என உறுதிபட தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.


Next Story