கொரோனா வைரஸ் பலி 132 ஆனது: வெளிநாட்டினர் வெளியேறுவதற்கு உதவ தயார் - சீனா அறிவிப்பு


கொரோனா வைரஸ் பலி 132 ஆனது: வெளிநாட்டினர் வெளியேறுவதற்கு உதவ தயார் - சீனா அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Jan 2020 3:41 AM GMT (Updated: 29 Jan 2020 9:41 PM GMT)

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டினருக்கு உதவ தயார் என அந்த நாட்டு அரசு அறிவித்து உள்ளது.

பெய்ஜிங்,

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் இருந்து கடந்த மாத இறுதியில் பிறப்பெடுத்த கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது. நாட்டின் 31 மாகாண மட்டத்திலான பிராந்தியங்கள் இந்த கொடிய வைரசின் பிடியில் சிக்கியுள்ளன.

இந்த வைரஸ் தாக்கியவர்கள் ஒருவித நிமோனியா காயச்சலுக்கு உள்ளாகி மரணத்தை தழுவி வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் தினந்தோறும் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்ந்து அரசையும், மருத்துவத்துறையையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றன.

இத்தகைய வீரியம் நிறைந்த இந்த ஆட்கொல்லி வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 132 ஆக உயர்ந்தது. இதில் ஹுபெய் மாகாணத்தில் மட்டும் 125 பேர் மடிந்துள்ளனர். அங்கு 3,554 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதைப்போல சீனா முழுவதும் 5,974 பேர் இந்த கொடிய வைரசின் பிடியில் சிக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தீவிர சிகிச்சையில் இருக்கும் அவர்களில் 1,239 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க அங்கு மேலும் 9,239 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள் தென்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்குதல் விரைவில் உச்சக்கட்டத்தை எட்டும் எனவும், அப்போது பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் இந்த நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது தொடர்பாக குழுவின் தலைவர் ஜோங் நன்ஷான் கூறுகையில், ‘கொரோனா வைரசின் தாக்கம் எப்போது உச்சக்கட்டத்தை அடையும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். எனினும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் உச்சக்கட்டத்தை எட்டும் என நினைக்கிறேன். பின்னர் அதிக அளவில் நோய் பரவும்’ என்றார்.

இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு 3 அல்லது 4 மாதங்கள் வரை ஆகும் எனவும், வைரசை அழிப்பதற்கான மருந்துகளை உருவாக்கவும் சில காலம் பிடிக்கும் எனறும் அவர் தெரிவித்தார்.

சீனாவில் ஜெட் வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு வெளிநாடுகளிலும் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது. அந்தவகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்த நாடு நேற்று அறிவித்தது.

மேலும் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருப்பதாக மலேசியாவும் கூறியுள்ளது. இதைப்போல கனடாவில் 3 பேர் கொரோனா பாதிப்புடன் இருப்பதாக அந்த நாடும் குறிப்பிட்டு இருக்கிறது.

இதற்கிடையே சீனாவில் வசித்து வரும் தங்கள் நாட்டினரை மீட்கும் நடவடிக்கைகளை பல்வேறு நாடுகள் தொடங்கி உள்ளன. அதன்படி சீனாவின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த ஜப்பானியர்கள் 206 பேரை ஏற்றிக்கொண்டு முதல் விமானம் நேற்று டோக்கியோ போய் சேர்ந்தது.

இவ்வாறு மீட்பு நடவடிக்கைகளை விரும்பும் நாடுகளுக்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார் என சீனா அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘உகான் மற்றும் ஹுபெய் மாகாணத்தில் வசித்து வரும் அனைத்து நாட்டு குடிமக்களின் உயிரையும், நலத்தையும் பாதுகாப்பதற்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. அங்கிருந்து தங்கள் நாட்டினரை வெளியேற்றுமாறு எந்த நாடும் கேட்டுக்கொண்டால் சர்வதேச நடைமுறைகளின்படி அதற்கான உதவியை சீனா அளிக்கும்’ என்று தெரிவித்தார்.

கொரோனா வைரசின் தாக்கம் குறையும் வரை சீனாவுக்கு விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள சீனாவுக்கு சர்வதேச நிபுணர் குழு ஒன்றை உலக சுகாதார அமைப்பு அனுப்பி வைத்து உள்ளது. சீனாவிலும், உலக அளவிலும் இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதே தங்களின் உயர்ந்தபட்ச நோக்கம் ஆகும் என அந்த அமைப்பின் தலைவர் கேப்ரியேசஸ் கூறியுள்ளார்.


Next Story