ஜப்பான்: பிஸ்கட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 5 தொழிலாளர்கள் உடல் கருகி சாவு


ஜப்பான்: பிஸ்கட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 5 தொழிலாளர்கள் உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 12 Feb 2022 7:52 PM GMT (Updated: 12 Feb 2022 7:52 PM GMT)

ஜப்பானில் பிஸ்கட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

டோக்கியோ,

ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ள துறைமுக நகரமான நிஜிகாடேவில் பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் உற்பத்தி பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் தொழிற்சாலையில் தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் தொழிற்சாலை முழுவதிலும் பரவியது. இதனால் பதறிப்போன தொழிலாளர்கள் அலறியடித்தபடி தொழிற்சாலையை விட்டு வெளியே ஓடினர். ஆனாலும் சில தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதனிடையே இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி தொழிலாளர்கள் 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஒரு தொழிலாளி மாயமானதாக கூறப்படுகிறது. அவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. 

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இது பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story