ரஷிய அதிபர் புதின் இன்று சவுதி அரேபியா பயணம்


ரஷிய அதிபர் புதின் இன்று சவுதி அரேபியா பயணம்
x

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் குறித்து ரஷிய அதிபர் புதின் ஆலோசனை நடத்த உள்ளார்.

மாஸ்கோ,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 250 பேரை இஸ்ரேல் பகுதியில் இருந்து பணயக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்திச்சென்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை வீசி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து பல நாடுகள் இஸ்ரேல்- ஹமாஸ் போரை நிறுத்துவதற்காக முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு செல்ல உள்ளார்.

இந்த பயணத்தின்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர், கச்சா எண்ணெய் சந்தை, இரு நாட்டு உறவு குறித்து சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அதேவேளை, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யனையும் ரஷிய அதிபர் புதின் சந்திக்கிறார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு புதின் ரஷியா செல்கிறார்.

இதனிடையே, ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நாளை ரஷியா செல்ல உள்ளார். அங்கு அவர் அதிபர் புதினை சந்திக்கிறார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் உச்சமடைந்து வரும் நிலையில் ரஷிய அதிபர் புதின் - ஈரான் அதிபர் ரைசி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Next Story