ஆன்மாவை பலப்படுத்தும் உணவு எது?


ஆன்மாவை பலப்படுத்தும் உணவு எது?
x
தினத்தந்தி 24 Nov 2017 12:30 AM GMT (Updated: 23 Nov 2017 11:05 AM GMT)

கண்களுக்கு ஒருவனாக காணப்பட்டாலும், மனிதன் முப்பரிமாணங்களை உடையவனாக இருக்கிறான். ஆவி, ஆத்மா, சரீரம் என்ற மூன்றையும் ஒருங்கிணைந்து பெற்றவனே மனிதன்.

ண்களுக்கு ஒருவனாக காணப்பட்டாலும், மனிதன் முப்பரிமாணங்களை உடையவனாக இருக்கிறான். ஆவி, ஆத்மா, சரீரம் என்ற மூன்றையும் ஒருங்கிணைந்து பெற்றவனே மனிதன். மிருகங்களுக்கு ஆத்மா மட்டும் கிடையாது. மனிதன் தன்னுடைய முப்பரிமாணத்தில் கண்ணுக்குத் தெரியும் அம்சத்தையே போற்றிக் கொண்டாடுகிறான். அந்த வகையில் கண்களுக்குத் தெரியும் சரீரத்தை, அதாவது உடலைப் பேணுவதில் தான் ஆயுள் நாட்களைக் கழிக்கிறான்.

அழகு, அந்தஸ்து, இவற்றை அடைய தேவைப்படும் செல்வம் ஆகியவற்றிலேயே கவனம் செலுத்துகிறான். இவற்றைப் பெற்று, மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து சிலர் திருப்தி அடைகின்றனர். பலர் திருப்தி அடையாமலேயே கடந்து செல்கின்றனர். உடல் என்பது அழியாதது அல்ல என்ற உண்மையை இவர்கள் அறியாதவர்கள் அல்ல. அழியக்கூடியதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது, கோடையில் ஐஸ்கட்டியில் சிலை செய்து அதை அலங்கரிப்பது போன்றது.

‘எந்தக் காலத்திலும் அழியாத ஆத்துமான் என்ற வஸ்து தனக்குள் இருக்கிறது’ என்பதை உணர்ந்தாலும் அதை அழகுள்ளதாக்கும் வழிகளை மிகப் பெரும்பாலானோர் நாடுவதில்லை. ஆத்மாவை பலப்படுத்தும் ஆன்மிக மார்க்கத்தில் செல்வதாகக் கருதி, பலர் தவறான வழிகளில் சென்று கொண்டிருக்கிறார்கள். புனிதப் பயணங்கள் உள்ளிட்ட உடல் ஒடுக்குதல்களால் ஆத்மா பலப்படாது. உடலை பலப்படுத்தி வாழச் செய்வதற்கென்று இருக்கும் உணவுகள் போல, ஆத்மாவுக்கென்று தனி உணவு உள்ளது.

அந்த உணவைக் குறித்து இயேசு, ‘ஜீவ அப்பம் நானே. என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்’ என்றார் (யோவான் 6:35). சரீரத்துக்கான உணவு, நீர், உறவுகள் போன்றவை தற்காலிக திருப்தியை அளித்தாலும், மீண்டும் அவற்றை சரீரம் நாடுகிறது. தற்காலிக திருப்தியை மட்டுமே அளிக்கும் எந்த அம்சமும் ஆத்மாவுக்கு தொடர்      புடையது அல்ல.

ஆனால் இயேசு கூறிய போதனைப்படி, தீய வழியில் இருந்து மனம் மாற வேண்டும்; குற்றச்செயலுக்கான மன்னிப்பை சம்பந்தப்பட்டவரிடத்திலும் இறைவனிடத்திலும் பெற வேண்டும்; சரீரத்தை கெடுக்கும் பாவங்களை விலக்க வேண்டும்; உள்ளத்தில் இருந்து புறப்படும் பெருமை, பொறாமை, இச்சை போன்ற தீய குணங்களை அகற்ற வேண்டும்; பிறவிக் குணங்களான எரிச்சல், கோபம் போன்றவற்றின் அடிப்படையிலான செயல்பாடுகளை நீக்க வேண்டும் என்ற முடிவை ஒருவன் முழுமனதோடு எடுத்தான் என்றால், அப்போதுதான் அவனது ஆத்மா விழிக்    கிறது.

விழிக்கும் அந்த ஆத்மாவை இறைவன் பலப்

படுத்துகிறார். ஆவி, ஆத்மா, சரீரம் ஆகிய மூன்றையும் கறைப்படுத்தக் கூடிய பாவங்கள் சூழ்ந்தாலும் அவற்றை செய்யாமல் இருக்கும் பலத்தை அவனுக்கு இறைவன் அளிக்கிறார். இந்த பாவங்களுக்குத் தப்பி வாழும் வாழ்க்கைதான் ஒருவனுடைய ஆத்மாவுக்கு நிரந்தர திருப்தி அளிப்பதாக அமைகிறது. அதாவது, இனி தனது ஆத்மாவை திருப்திப்படுத்த வேறு வழிபாடுகளுக்கு அவன் செல்லத் தேவையில்லை.

கடல் பயணத்தில் இருப்பவர்களுக்கென்று தயாரிக்கப்படும் ஒருவகை உணவு, ஒருமுறை சாப்பிட்டாலே பல மாதங்கள் உடலுக்கு சக்தியை அளித்துக் கொண்டிருக்கும் என்று கூறப்படுவதுண்டு. அதுபோல இயேசு என்ற ஜீவ அப்பத்தை ஒருமுறை ஏற்று அவர் காட்டிய வழியில் நடக்கத் தொடங்கிய பிறகு, வாழ்நாள் முழுவதும் எந்த சூழ்நிலையிலும் ஆத்ம திருப்தியோடு அமைதி குலையாமல் இருக்கலாம். இன்னொரு உணவுக்கு அங்கும் இங்கும் அலைய வேண்டியதில்லை.

ஆத்மாவில் இப்படிப்பட்ட திருப்தியை அடைந்தவர்கள், தங்களின் சரீர ரீதியான வாழ்க்கையைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். வறுமை, வியாதி போன்ற துன்பங்கள் அவனது நிம்மதியைக் குலைத்துவிடாது. இதுவே உண்மையான ஆன்மிக வழி. ஆன்மிக வழியில் இருப்பதாக தங்களைப் பற்றி நினைப்பவர்கள், இதுபோன்ற திருப்தியோடு புலம்பாமல் இருக்கிறோமா என்பதை ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

இந்தக் கருத்தை தன்னை தேடி வந்த மக்களுக்கு ஒரு உதாரணம் மூலமாக இயேசு விளக்குகிறார். ஒருமுறை அதிக எண்ணிக்கையில் இயேசுவை நோக்கி மக்கள் வந்தனர். அவர்களுக்கு போதனை வழங்கிய இயேசு, அப்பத்தையும், சமைத்த மீனையும் அற்புதமாக கொண்டு வந்து அவர்   களுக்குக் கொடுத்தார். இந்த அற்புதத்தைக் கண்ட அவர்கள், இயேசுவை தங்கள் நாட்டை ஆளும் ராஜாவாக ஆக்கும் முயற்சியில் இறங்கினர் (யோவான் 6:14, 15).

அற்புதங்களைச் செய்வதன் மூலம் மக்களை தன்பக்கம் வரச் செய்து, ஆத்மாவுக்கு ஏற்ற போதனைகளை இயேசு வழங்கினாலும், மக்களோ அந்த போதனைகளுக்கு செவி சாய்க்காமல் சரீர ரீதியான கண்ணோட்டத்திலேயே அவரது அற்புதங்களையே நாடினர். அப்படிப்பட்ட மக்களை விட்டு இயேசு விலகிச் சென்றார்.

இன்றும் அதுபோன்ற மக்கள் கூட்டம் உள்ளது. ஆத்மாவை குணப்படுத்தும் இயேசுவின் தன்மை, நோக்கம் பற்றி அறிந்தும், அவரை வியாதி, வறுமை போன்ற சரீர விடுதலைகளுக்காக மட்டும் தேடி வருகிறவர்களை விட்டு அவர் விலகுகிறார் என்பதற்கு அந்த சம்பவம் ஒரு உதாரணம்.

மீண்டும் அந்த மக்கள் அவரை விரட்டிப் பிடித்தனர். அப்போது இயேசு, ‘வயிற்றை நிரப்பி தற்காலிக திருப்தி அளிக்கும் உணவுக்காக என்னை தேடி வருகிறீர்கள். இது தின்ற பிறகு அழிந்துபோய்விடுகிறது. என்னிடத்தில் இருந்து அழியாத ஆன்மாவுக்கான உணவை பெற்றுக்கொள்ளுங்கள். என் போதனைகளை விசுவாசித்து அதன்படி நடப்பதுதான் என்றென்றும் அழியாத திருப்தி தரும் உணவாக உள்ளது’ என்று போதித்தார்.

மோசே காலத்தில் மக்களின் பசிக்காக வானத்தில் இருந்து அதிசயமாக ‘மன்னா’ என்ற உணவு தரப்பட்டது. அது தூதர் களுக்கான உணவு. அதை உண்டவர்கள்கூட பின்னர் இயல்பாக இறந்துவிட்டனர். தூதர்கள் போல் சரீரத்துக்கு அழியாத தன்மையை அது கொடுக்கவில்லை. எனவே, ‘சரீர ரீதியான வி‌ஷயங்களை என்னிடம் தேடாதீர்கள். நான் சொல்வதெல்லாம் ஆவி, ஆத்மாவுக்கானது’ என்பதை வலியுறுத்தினார் (யோவான் 6: 26, 27, 49, 50, 51, 63).

இன்றும் பலர் மூலம் விடுதலைக்கான அழைப்பு விடுக்கப்  படுகிறது. அந்த விடுதலை எதற்கானது? சரீரத்துக்கானதா? ஆத்மாவுக்கானதா? என்பதை ஆராய வேண்டும். இயேசுவின் போதனைப்படி நடக்காதவன் சரீர தேவைகளைதான் முன்னிறுத்துவான். அதையே மற்றவர்களுக்கும் போதிப்பான்.

ஆனால் இயேசுவின் வழிநடந்து, ஆத்ம விடுதலை அடைந்து, நிரந்தர திருப்தியை அடைந்தவன், ஆத்மா சம்பந்தப்பட்டதையே போதிப்பான் என்று இயேசு கூறியிருக்கிறார் (யோவான் 3:6).

எனவே போதனை எதைப் பற்றியது என்பதை வைத்து போதகரை அடையாளம் காணுங்கள்.

Next Story
  • chat