கர்த்தரை நம்புங்கள், வெற்றிகள் தேடி வரும்


கர்த்தரை நம்புங்கள், வெற்றிகள் தேடி வரும்
x
தினத்தந்தி 8 Dec 2017 12:45 AM GMT (Updated: 7 Dec 2017 8:06 AM GMT)

நம்பிக்கையற்ற உலகில் ஒவ்வொரு நாளும் தேவ கிருபையினால் வாழ்ந்து வருகிறோம்.

ம்பிக்கையற்ற உலகில் ஒவ்வொரு நாளும் தேவ கிருபையினால் வாழ்ந்து வருகிறோம். பலதரப்பட்ட போராட்டங்கள், நெருக்கங்கள், பொருளாதார பிரச்சினைகள் என பலவிதங்களில் இந்நாட்களில் மக்கள் மிகுந்த கஷ்டத்தின் வழியாய் கடந்து போகிறார்கள். இந்த செய்தியை வாசிக்கிற உங்கள் வாழ்க்கையும் பல நெருக்கம் நிறைந்ததாக காணப்படும் என்றால் கர்த்தருக்குள் உங்களைத் திடப்படுத்திக் கொண்டு ஆண்டவர் மேல் நம்பிக்கையாயிருங்கள்.

‘‘அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்’’. சங்கீதம் 112:7, ‘‘நான் நம்புகிறது அவராலே வரும்’’ (சங்கீதம் 62:5) என தாவீது கூறுவது போல, ‘‘நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது’’ என நீதி.23:18 சொல்வது போல, ஆண்டவரை மனப்பூர்வமாய் நம்பி, தொடர்ந்து செயல்பட்டால் வெற்றிகள் தேடி வரும்.

மனிதன் மேல் நம்பிக்கை

‘மனு‌ஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனு‌ஷன் சபிக்கப்பட்டவன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘‘அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மை வருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்’’. எரேமியா 17:5,6

எந்த சூழ்நிலையிலும் உங்கள் இருதயம் மனு‌ஷன் பக்கமாய் சார வேண்டாம். இந்தக் காரியத்தில் மிகவும் ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இன்று அநேகர் அரசியல் தலைவர்கள், கோடீஸ்வரர்கள், பெரிய மனிதர்கள், அதிகாரிகள் என மனிதர்களையே நம்பி அவர்களையே சார்ந்து வாழ்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், மனு‌ஷனை நம்பினால் உதவி செய்வார்கள் எனக் காத்திருந்து, காத்திருந்து மிகுந்த மன உளைச்சல் அடைந்து சோர்ந்து போகிறார்கள்.

அநேக பெற்றோர்களும் கூட பிள்ளைகளை நம்பி அவர்களைச் சார்ந்து இறுதியில் பிள்ளைகளால் அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். மேலே குறிப்பிட்ட எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தைகளை உன்னிப்பாய் வாசித்துப் பாருங்கள். மனிதனை நம்பும் போது எண்ணற்ற ஆசீர்வாதங்களை இழந்து போகிறோம். எந்த நிலையிலும் நமக்கு உதவி செய்யக்கூடியவர், ஆண்டவராகிய இயேசு ஒருவர்தான். ஆகவே இன்றே தீர்மானியுங்கள். நாசியில் சுவாசமுள்ள மனு‌ஷனை நம்புவதை விட்டு விட்டு கர்த்தரையே நம்புங்கள், திடமாயிருங்கள்.

ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை


‘‘இவ்வுலகத்திலே ஐசுவரியம் உள்ளவர்கள் இறுமாப்பான சிந்தை உள்ளவர்களாக இருக்காமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்கவும்’’. 1 தீமோத்தேயு 6:17

‘பணம் என்றால் பிணமும் தன் வாயைத் திறக்கும்’ என்று கூறுவார்கள். ‘பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்’ என்று வேதம் கூறுகிறது. அதே வேளையில் ‘‘பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது’’ (1 தீமோத்தேயு 6:10) என்று வேதம் கூறியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இன்றைக்கு பண ஆசையினால் மோசம் போனவர்கள் ஏராளம். பணத்தை நம்பி தேவ கிருபையை இழந்தோர் ஏராளம். ஆனால் இங்கே தேவ வசனம் என்ன சொல்லுகிறது. இந்த உலகத்தில் சகல வசதிகள் படைத்தவர்கள் இறுமாப்பான சிந்தை கொள்ளாமல், நிலையற்ற பணத்தின் மேல் நம்பிக்கை வைக்காமலும், நாம் அனுபவிக்கிற சகல நன்மைகளையும் நமக்கு நிறைவாக கொடுக்கிற ஜீவனுள்ள தேவன் மேல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

கஷ்ட காலத்தில் ஆண்டவரையே சார்ந்து வாழ்ந்த அநேகர் தங்களுக்கு வசதிகள் வந்த உடனே அதைக் கொடுத்த ஆண்டவரை மறந்து விட்டு தங்கள் கைகளில் இருக்கும் பணம், பொருட்கள் மீது நம்பிக்கை உடையவர்களாய் மாறி விடுகிறார்கள்.

ஐசுவரியம் தேவனுடைய ஆசீர்வாதம் தான். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் அந்த ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்கும்போது தான் பிரச்சினைகளும், போராட்டங்களும் நமக்குள் வந்து விடுகிறது என்பதை மறந்து போகாதீர்கள். ஆகவே எப்போதும் கர்த்தரை சார்ந்து அவரையே நம்புங்கள். அப்போது ஐசுவரியம் உங்களைத் தொடரும்.

கர்த்தர் மேல் நம்பிக்கை

‘‘கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனு‌ஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத் தாழ்ச்சியான வரு‌ஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்’’. எரேமியா 17:7,8

மனு‌ஷனை நம்பாமல், ஐசுவரியத்தை நம்பாமல், கர்த்தரையே நம்பும்போது எத்தனை ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என மேற்கண்ட வசனம் மூலம் அறியலாம். அந்த ஒவ்வொரு ஆசீர்வாதங்களும், உங்களில் நிறைவேற கர்த்தரை நம்பித் திடமனதாயிருங்கள்.

‘‘நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்’ என ரோமர் 4:18–ல் ஆபிரகாமைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அனுதினமும் எந்த சூழ்நிலையிலும்   ஆண்டவரை நம்பிக்கையோடு பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நம்புவதெல்லாம் கர்த்தராலே வரும்.

‘‘நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள், இரட்டிப்பான நன்மையைத் தருவேன். இன்றைக்கே தருவேன்’’ (சகரியா 9:12) என்று வேதம் கூறுவதை மறந்துவிட வேண்டாம்.

ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை–54

Next Story