பழத்தால் கிடைத்த பரிசு


பழத்தால் கிடைத்த பரிசு
x
தினத்தந்தி 30 Aug 2018 10:29 AM GMT (Updated: 2018-08-30T15:59:45+05:30)

கிருஷ்ணர் சிறுவயதில் செய்த லீலைகள் எண்ணிலடங்காதவை. அவற்றில் ஒன்று ஏழை வியாபாரியான, ஒரு பழம் விற்கும் பெண்ணுக்கு அனுக்கிரகம் செய்தது.

ஒரு முறை பழம் வியாபாரம் செய்யும் வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, நந்தகோபரின் இல்லத்திற்கு முன்பாக நின்று கொண்டு, ‘பழம் வேண்டுமா? பழம் வாங்குறீங்களா?’ என்று கூவிக்கொண்டிருந்தாள்.

அந்த சத்தத்தைக் கேட்ட கிருஷ்ணர், வீட்டில் இருந்து தன் சின்னஞ் சிறிய கைக்குள் அடங்கும் அளவிலான தானியத்தை எடுத்துக் கொண்டு பழக்காரியை நோக்கி தளிர் ஓட்டம் ஓடினார். தன் தாயார் யசோதா, தெருவுக்கு வியாபாரம் செய்ய வருபவர்களிடம் இதேபோல் தானியங்களை கொடுத்து விட்டு, தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதை பல முறை கிருஷ்ணர் பார்த்திருக்கிறார். அதனால் தான் தானும் கொஞ்சம் தானியத்தை எடுத்துக் கொண்டு அந்த பழக்காரியிடம் வந்தார்.

சிறிதளவான தானியத்தை மூதாட்டியிடம் கொடுத்தார். அப்போது அந்தச் சிறிய கையில் இருந்து தானியங்கள் பெருமளவு தரையில் கொட்டின. பழம் வியாபாரம் செய்யும் மூதாட்டி, கிருஷ்ணனின் அந்த கொள்ளை கொள்ளும் அழகில் மயங்கிப் போனாள். கண்ணன் கொடுத்த தானியத்திற்கு பழத்தை கொடுக்க முடியாது என்றாலும், கண்ணனின் கையால் எவ்வளவு பழங்களை பிடிக்க முடியுமோ, அவ்வளவு பழங்களை அந்த மூதாட்டிக் கொடுத்தாள். ஒன்றிரண்டு தரையில் உருண்டு ஓடினாலும், குழந்தைக்கே உரிய ஆசையைப் போல் அனைத்து பழங்களையும் வாங்க ஆவல் கொண்டார் கிருஷ்ண பரமாத்மா.

பழங்களை வாங்கிக்கொண்டு, இல்லத்திற்குள் ஓடி மறைந்தார் கிருஷ்ணர். மூதாட்டி மகிழ்ச்சியில் திளைத்தாள். பின்னர் புறப்படத் தயாரானவள், தன் பழக் கூடையை தூக்க முயன்றபோது, அதில் விலைமதிப்பற்ற ரத்தினங்களும், மாணிக்கங்களும் இருப்பதைக் கண்டு வியந்தாள்.

உண்மையான அன்பும், பாசமும் நிறைந்த உள்ளத்திற்கு, இறைவன் கொடுத்த விலை மதிப்பற்ற பரிசு அது என்பதை உணர்ந்துகொள்ள அந்த மூதாட்டிக்கு வெகுநேரம் ஆனது. 

Next Story