நிலைத்திருத்தல் தரும் ஆசீர்வாதம்


நிலைத்திருத்தல் தரும் ஆசீர்வாதம்
x
தினத்தந்தி 12 Sep 2018 10:31 AM GMT (Updated: 12 Sep 2018 10:31 AM GMT)

‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிட மகனுடைய (இயேசுவின்) சதையை உண்டு அவருடைய ரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்’ என்கிறது யோவான் 6:53.

படிக்கும் போது ஒரு அதிர்ச்சியை உருவாக்கும் வாசகம் இது. ஆனால், ஆழமான ஆன்மிக அர்த்தங்களைக் கொண்டது.

“நான் விண்ணிலிருந்து இறங்கி வந்த உணவு” என்றார் இயேசு. யூதர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா?” என அவர்கள் முணுமுணுத்தனர்.

‘தன்னுடைய உடலை எப்படி இவர் உண்ணத் தரமுடியும்? இதென்ன போதனை...’ என இயேசுவுக்கு எதிராக அவர்கள் சிந்தித்தார்கள். அவர்கள் பழைய ஏற்பாட்டு சட்டங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்தவர்கள்.

‘ரத்தம் என்பது உயிர், அதை யாரும் சாப்பிடக் கூடாது’ என்பதை விவிலியம் சொல்கிறது. ‘ரத்தத்தைப் பருகக்கூடாதெனில் எப்படி இயேசுவின் ரத்தத்தைப் பருகுவது? இவர் எப்படி இதைச் சொல்லலாம்’ என அவர்கள் சிந்தித்தனர்.

பாவத்தைக் கழுவத்தான் ரத்தம் பயன்பட்டு வந்தது. ஆனால் அது உணவாக உட்கொள்ளக் கூடியது அல்ல. இறைவனின் சமூகத்தில் சிந்தப்பட வேண்டியது மட்டுமே என்பதே வழக்கம்.

இப்போது அது, “எனது ரத்தத்தைக் குடியுங்கள்” என மாறுகிறது. அதன் பொருள் என்ன? விலங்கின் ரத்தம் நம்மை பாவத்திலிருந்து கழுவியது எனும் நிலை, இன்று இயேசுவின் ரத்தம் பாவத்தைக் கழுவியதுடன் மீட்பும் கொடுத்தது என மாறியது.

“அவர் பலியாகப் படைத்த ரத்தம்... அவரது சொந்த ரத்தமே” (எபி 9:12) என்கிறது விவிலியம். இது நித்திய மீட்பு. இந்த ரத்தத்தின் வழியாக நாம் கடவுளின் மீட்பில் இணைகிறோம்.

அது நாம் என்றென்றைக்கும் பிழைக்கும்படியான ரத்தமாய் மாறுகிறது. இந்த ரத்தம், தொலைவில் இருந்த நம்மை அருகில் கொண்டு சேர்க்கிறது. அது நம்மை இயேசுவோடு இணைக்கிறது.

ஆலயத்தில் திருவிருந்தில் பங்கு பெறும் முன் நாம் தாழ்மையின் செபத்தைச் சொல்கிறோம். அதன் பொருள், நாம் இறைவனை விட்டுத் தொலைவில் இருக்கிறோம், இப்போது இறைவனுக்கு சமீபமாய் வருகிறோம் என்பது தான்.

நாம் திருச்சபையில் சேர்வதன் அடையாளம் திருமுழுக்கு. சுயமாய் இறைவனோடு இணைவதன் அடையாளம் திரு விருந்து.

இயேசுவின் ரத்தம் நம்மை இறைவனின் அருகில் கொண்டு வருவதுடன், அவரில் நிலைத்திருக்கவும் செய்கிறது.

நிலைத்திருத்தல் நமக்கு எதையெல்லாம் தருகிறது?

1. பிதாவோடு உறவு

“உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்” (யோவான் 15:1) என்கிறார் இயேசு.

உயிர்த்தபின், “என் பிதாவும் உங்கள் பிதாவும்” என விண்ணகத் தந்தையை நமது தந்தையாய் அவர் அறிமுகம் செய்து வைக்கிறார்.

அதனால் நம்மை அவர் சகோதரர், சகோதரியர் என அழைத்து மிகப்பெரிய பாக்கியத்தை அளிக்கிறார். கடவுளுடைய சகோதரர்களாய் உருமாறும் பாக்கியம் வேறெங்கும் கிடைக்காதது.

2. வார்த்தையோடு உறவு


“நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும்” (யோவான் 15:7 ) என நிலைத்திருப்பது என்பது இறைவார்த்தையோடு நிலைத்திருப்பது என விளக்குகிறார். அப்படி இருக்கும் போது தான் நாம் கனி கொடுப்பவர்களாக மாற முடியும்.

3. சீடரெனும் உறவு


“நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” (யோவான் 15:8) என நம்மை அவரது சீடர்களாக மாற்றுகிறார். நிலைத்திருத்தல் என்பது சீடராதல் எனும் புரிதலை நமக்குத் தருகிறது.

4. அன்பில் இணையும் உறவு

“என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்” (யோவான் 15:9) என நிலைத்திருத்தல் என்பது அன்பில் நிலைத்திருத்தல் என இயேசு புரிய வைக்கிறார். அப்படி நாம் அவரில் பெற்றுக்கொள்ளும் அன்பை பிறருக்குப் பகிர வேண்டியவர்களாக இருக்கிறோம்.

5. கட்டளைகளோடு உறவு


“நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்” (யோவான் 15:10) என நிலைத்திருத்தல் என்பது கட்டளைகளைக் கடைபிடித்தல் என இயேசு விளக்கம் சொல்கிறார்.

“ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்வதே நான் தரும் கட்டளை” என்றார் இயேசு. கடவுள் தரும் கட்டளை என்பது எல்லோரிடமும் அன்பாய் இருப்பது என புரிந்து கொள்ளலாம்.

“என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும், உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்” என இயேசு (யோவான் 15:11) சொல்லி இறைவனின் நிலைத்திருத்தலே மகிழ்ச்சியில் நிலைத்திருத்தல் என்பதையும் விளக்குகிறார்.

அவரில் நிலைத்திருப்போம்.

(தொடரும்) 

Next Story
  • chat