ஆன்மிகம்

அசைக்க முடியாத நம்பிக்கை + "||" + Unshakable faith

அசைக்க முடியாத நம்பிக்கை

அசைக்க முடியாத நம்பிக்கை
மத்தேயு 15:21 முதல் 28 வரையுள்ள வசனங்கள் ஒரு மிகப்பெரிய விசுவாச நிகழ்வை விளக்குகின்றன.
கனானேயப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார்.

ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர்.

அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.

ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார்.

அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார்.

உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார்.

இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

இந்த நிகழ்வு யூதர்கள் அல்லாத பிற இன மக்கள் வாழும் பகுதியில் நடந்த இந்த புதுமை நமக்கு சில படிப்பினைகளைத் தருகிறது.

1. கனானேயப் பெண்ணின் அணுகுமுறை, எப்படி செபிக்க வேண்டும் என்பதை நமக்குச் சொல்லித் தருகிறது. அவள் முதலில் தனது சமூக, மத, கலாச்சாரக் கட்டமைப்புகளைத் தாண்டி இயேசுவின் முன்னால் வருகிறாள். அத்தகைய அணுகுமுறை நம்மிடமும் இருக்க வேண்டும்.

2. இயேசுவின் மவுனம் நமது விசுவாசத்தைச் சோதிக்கும் ஆயுதம். அத்தகைய சூழல்களில் உடைந்து விடாத விசுவாசம் கொண்டிருக்க வேண்டியது அத்தியாவசியம். கனாேனயப் பெண்ணின் கதறலை, இயேசுவின் மவுனம், மவுனமாய் எதிர்கொள்கிறது. நமது விண்ணப்பங்களுக்கு பதிலாக வருகின்ற இறைவனின் மவுனம் நமது விசுவாசத்தை வலுப்படுத்த வேண்டும்.

3. இயேசுவின் சீடர்கள் கனானேயப் பெண்ணுக்காக இயேசுவிடம் பரிந்து பேசவில்லை. ஆனாலும் அந்தப் பெண்ணின் பார்வை இயேசுவின் மீதே இருந்தது, சீடர்களின் மீது அல்ல. நாம் இயேசுவின் மீது வைத்த பார்வையை விலக்காமல் இருக்கிறோமா?

4. கனானேயப் பெண்ணின் தொடர் வேண்டுதலை, இயேசுவின் பதில் தடுத்து நிறுத்தியது. அவள் இயேசுவின் முன்னால் வந்து பணிகிறாள். பின்னால் இருந்தபோது எழுந்த கதறல் ஒலி, இப்போது விண்ணப்பமாய் உருமாறிவிட்டது. இயேசுவை நெருங்க நெருங்க, நமது கதறல் மெல்லிய விண்ணப்பமாய், பணிவான வேண்டுதலாய் மாறிவிடுகிறது.

5. “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” எனும் இயேசுவின் பதில் அந்தக் காலத்தில் பிரபலமாய் இருந்த ஒரு பழமொழி. இஸ்ரயேல் மக்களுக்காக வந்த மீட்பை பிற இனத்தாருக்குக் கொடுக்கும் காலம் வரவில்லை என்கிறார் இயேசு. கனானேயப் பெண்ணோ தாழ்மை கொண்டாள். இயேசுவை நாடி வரும் ஒவ்வொருவருக்கும் அந்தத் தாழ்மை இருக்க வேண்டியது அவசியம்.

6. “தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என கனானேயப் பெண் இயேசுவிடம் சொல்கிறாள். தன்னை அடிமையாக, நாய்க்குட்டியாக பாவித்துக் கொண்ட அந்த பெண் உரிமையாளரின் கனிவை எதிர்பார்த்து நிற்கிறாள். நாம் அந்த மனநிலையோடு இறைவனை நாடுகிறோமா?

7. “தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” எனும் பதிலின் வழியாக அந்தப் பெண் இயேசுவிடம் தனக்கு பதில் உடனே வேண்டும் என்கிறாள். “பிள்ளைகள் தின்ற பின்பு மிஞ்சுவது அல்ல, பிள்ளைகள் தின்னும் போதே சிந்துவது” என அவள் கேட்கிறாள்.

8. அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும், என்கிறார் இயேசு. நாய்க்குட்டியாய் உருவகிக்கப்பட்டவள் விசுவாசத்தின் வலிமையால் ‘அம்மா’ என அழைக்கப்படும் நிலைக்கு உயர்த்தப்படுகிறாள்.

9. ஒரு தாயின் பிரார்த்தனை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதை கனாேனயப் பெண்ணின் பிரார்த்தனை நமக்கு சொல்லித் தருகிறது. மூன்று குணாதிசயங்கள் செபத்தில் நிச்சயம் இருக்க வேண்டும். பணிவு, விடாமுயற்சி மற்றும் விசுவாசம்.

10. இந்த புதுமையில் இயேசுவே வானிலிருந்து இறங்கி வந்த உணவாகவும் காட்சியளிக்கிறார். இஸ்ரயேல் மக்களுக்காக வந்த மீட்பர், பிற இனத்தாரான நமக்கு மீட்பராகவும் மாறிய நிகழ்ச்சியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

11. ஓய்வு தேடிச் சென்ற இயேசு ஓய்வை விட்டு விட்டு மனித நேயப் பணியைச் செய்கிறார். ஓய்வு எனும் தேவையை விட, பணி செய்தல் எனும் கடமை நம்மிடமும் இருக்க வேண்டும்.

இந்த சிந்தனைகளை மனதில் கொண்டால், நமது விசுவாசமும் ஆழமாகும்.

 - சேவியர், சென்னை.

தொடர்புடைய செய்திகள்

1. இனிமை மிகு பாடல்
திருவிவிலியத்தை வாசிப்பவர்களை புரட்டிப் போடும் ஒரு நூல் என இந்த நூலைச் சொல்லலாம். ஆன்மிக நூலுக்குள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டதைப் போலத் தோன்றும் ஒரு காதல் நூல் இது.
2. பெற்றோர்களை மதிக்க வேண்டும்
இந்த நவீன யுகத்தில் வாழ்கின்ற மக்களிடையே பெற்றோர்களை மதிப்பதும் அவர்கள் சொற்கேட்டு வளர்வதும் மிகக் குறைந்து விட்டது என்றே கூறலாம்.
3. ஜெபத்தை கேட்கும் தேவன்
மனுக்குலத்தின் மீட்பிற்காகவும், இரட்சிப்பிற்காகவும் மனு அவதாரம் எடுத்த இயேசு பிரான் பூமியில் வாழ்ந்த நாட்களில் சிறுமைப்பட்ட, நொறுங்குண்ட, வியாதிபட்ட அநேகருக்கு விடுதலையும், சமாதானத்தையும், சுகத்தையும் அருளினார்.
4. சாமுவேல்: இரண்டாம் நூல்
சாமுவேல் முதல் நூலும், இரண்டாம் நூலும் இணைந்த ஒரே நூலாக இருந்தவை. எபிரேயத்திலிருந்து கிரேக்கத்துக்கு மொழிபெயர்த்த போது அதை வசதிக்காக இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்கள்.
5. உபத்திரவங்கள் உங்களை மேற்கொள்ளாது
‘அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம் பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள், உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’. எரே.1:19