ஆறுதலின் தெய்வம்


ஆறுதலின் தெய்வம்
x
தினத்தந்தி 24 Oct 2018 10:08 AM GMT (Updated: 24 Oct 2018 10:08 AM GMT)

கிறிஸ்துவுக்குள் அன்பான உங்கள் ஒவ்வொருவரையும் இணையற்ற இயேசுவின் நல் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறேன்.

நிலையில்லா இவ்வுலகில் நிம்மதியிழந்து வேதனையோடு ஆறுதலைத் தேடி அநேகர் வாழ்கிற இந்நாட்களில், நம்மை ஆறுதல்படுத்தி அரவணைக்கக் கூடியவர் ஒருவர் உண்டு என்பதைக் குறித்து உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அன்பான சகோதரனே, சகோதரியே, குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அநேக பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டு, என்னை யார் தேற்றுவார்? யார் என்னை ஆறுதல் படுத்துவார்? என்று வேதனை யோடு காணப்படுகிறீர்களா?

நம் அருமை ஆண்டவராகிய இயேசு சொல்கிறார், ‘நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்’ (ஏசா.51:12). இந்த வார்த்தை நம்மை எவ்வளவு சந்தோஷப்படுத்துகிறது.

எப்படி கர்த்தர் நம்மை ஆறுதல்படுத்துகிறார்?

ஜெபிக்கும்போது ஆறுதல்

இவ்வுலக மனிதர்களிடம் நாம் நம் கவலைகளைச் சொன்னால், அந்த வேளையில் ஏதோ ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி நம்மைத் தேற்றக் கூடும். ஆனால் அந்த ஆறுதல் நிரந்தரமானதல்ல. அதே வேளையில் நாம் ஆண்டவரிடம் போய் அவரிடம் நம் மனவேதனைகளைக் கொட்டினால் நமக்கு நிரந்தரமான ஆறுதல் கிடைப்பது நிச்சயம்.

வேதத்திலே அன்னாளுக்குப் பிள்ளையில்லாதிருந்தது. அவளது உறவுப் பெண்மனி அவளை மிகவும் நிந்தித்து, அவமானப்படுத்தி வேதனைப்படுத்தினாள். அவளுடைய புருஷன் எவ்வளவு தான் அவளை ஆறுதல் படுத்தினாலும் அவளால் ஆறுதலடையவே முடியவில்லை.

அவள் செய்த ஒரு காரியம் என்ன தெரியுமா? தேவனுடைய ஆலயத்திற்குச் சென்று கர்த்தருடைய சன்னிதியில் தன் இருதயத்தில் இருந்த வேதனையை கொட்டினாள். அவள் நிரந்தரமான ஆறுதலை தேவனிடமிருந்து பெற்றுக்கொண்டாள்.

பிரியமானவர்களே, வேதனை நம்மைத் தாக்கும்போது, மனிதர்களிடம் ஓடி ஆறுதலைத் தேடாதீர்கள். தேவ சந்நிதியில் உங்கள் இதய பாரத்தை வைத்து விடுங்கள். கர்த்தர் நிச்சயம் உங் களைத் தேற்றி, அரவணைத்து, ஆசீர்வதிப்பார்.

வேத வசனங்கள் மூலம் ஆறுதல்

இரண்டாவதாக நம் இருதயம் துக்கத்தால் வேதனைப்படும் போது கர்த்தர் கொடுத்த வேதத்தை நாம் வாசிக்கும் போது, அந்த வேத வசனங்கள் மூலமாக கர்த்தர் நம்மை ஆறுதல் படுத்துகிறார்.

‘தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதி யிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது’. (ரோமர் 15:4)

மேற்கண்ட வசனத்தை நாம் வாசித்துப் பார்த்தால் வேத வசனங்களை வாசிக்கும் போது ஆறுதல் உண்டாகிறது என்பது தெளிவாகிறதல்லவா? பிரியமானவர்களே, நாம் நம்முடைய வேதத்தை தியானிக்க, தியானிக்க அந்த வசனங்களினால் நம் தேவன் நம்மோடே பேசி நம்மை ஆறுதல் படுத்துகிறார்.

என்னுடைய வாழ்க்கையிலும் என் மனதில் வேதனை துக்கம் வாட்டும் போது, நான் வேதத்தை எடுத்து வாசிப்பதுண்டு, அந்நேரங்களில் எல்லாம் நம் அருமை தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களால் என்னை ஆறுதல்படுத்தி என் வேதனைகளை எல்லாம் மாற்றுவார். என்னை ஆறுதல்படுத்தி வருகிற அதே தேவன் உங்களையும் தம் வசனத்தின் மூலம் ஆறுதல்படுத்த வல்லவராயிருக்கிறார்.

பரிசுத்த ஆவியால் உண்டாகும் ஆறுதல்

‘பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல், இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்’. (ஏசா.28:11,12)

பிரியமானவர்களே, வேதனை பாரத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிற அருமையான சகோதரனே, சகோதரியே, பரிசுத்த ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷையிலே தேவனைத் துதிக்கத் தொடங்குங்கள். நீங்கள் ஆவியில் நிரம்ப, நிரம்ப பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருவார். அளவில்லாத தேவ பிரசன்னம் உங்களை மூடும். ஆவியானவர் உங்கள் கண்ணீரைத் துடைப்பார். உங்கள் வேதனைகளை மாற்றுவார். உங்களை அணைத்துக் கொள்ளுவார். ஆனந்த தைலத்தினால் உங்களை அபிஷேகிப்பார்.

கண்ணீரின் பாதையில் நடந்து கொண்டிருக்கிற அன்பு சகோதரனே, சகோதரியே, இந்தக் கண்ணீரின் பள்ளத்தாக்கு நிரந்தரமல்ல. களிப்பான நீரூற்றாய் மாற்ற முடியும். துக்கம் உங்களை வாட்டும்போது மனிதர்களிடம் ஓடாதீர்கள். தேவ சமூகத்தில் உங்கள் கண்ணீரை ஓடவிடுங்கள். ஆவியில் நிரம்பி, அந்நிய பாஷைகளைப் பேசி ஜெபிக்கத் தொடங்குங்கள்.

சகல ஆறுதல்களின் தேவன் தாமே உங்களை ஆறுதல்படுத்துவது உறுதி. கண்ணீரின் பள்ளத்தாக்கு களிப்பான நீரூற்றாய் மாறுவது உறுதி. உங்கள் கண்ணீர் ஆனந்த கண்ணீராய் மாறுவது உறுதி. உங்கள் துக்க நாட்கள் முடிந்து போவது உறுதி.

சகோதரி. கிறிஸ்டினா ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.

Next Story