விவிலியத்தில் முதலில் எழுதப்பட்ட நற்செய்தி 'மார்க்'


விவிலியத்தில் முதலில் எழுதப்பட்ட நற்செய்தி மார்க்
x
தினத்தந்தி 29 Oct 2019 3:45 AM GMT (Updated: 28 Oct 2019 10:08 AM GMT)

விவிலியத்தில் இடம் பெற்றுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் முதலில் எழுதப்பட்டது மார்க் நற்செய்தி தான். இது இயேசுவின் மீது நம்பிக்கை இல்லாத பிற மக்களுக்காக எழுதப்பட்டது. பரபரப்பான ஒரு செயல்களின் தொகுப்பாக இந்த நூலை மார்க் வடிவமைத்திருக்கிறார்.

மார்க் இயேசுவின் நேரடி அப்போஸ்தலர் கிடையாது. இயேசுவோடு தொடர்ந்து நடந்த அனுபவம் அவருக்கு இல்லை. எனில் எப்படி அவருக்கு இயேசுவைக் குறித்த தெளிவான தகவல்கள் கிடைத்தன?,

அவர் தனது வாழ்க்கைப் பயணத்தில் மூன்று மிக முக்கியமான நபர்களின் உதவியாளராக இருந்திருக்கிறார். முதலாவது பர்னபா, அந்தக்கால முக்கியமான கிறிஸ்தவத் தலைவர். இரண்டாவது பவுல், கிறிஸ்தவம் பரவ மிக முக்கியமான காரணியாய் இருந்தவர். மூன்றாவதாக பேதுரு, இயேசுவின் அப்போஸ்தலர்.

பேதுருவிடமிருந்து நிறைய தகவல்களை மார்க் பெற்றார். பேதுருவின் உரைகளை லத்தீனில் மொழிபெயர்த்துப் பேசும் பணியை இவர் செய்தார். ரோம் நகரம் முழுவதும் இவர் பேதுருவோடு சுற்றித் திரிந்தார்.

அப்போது சிலர் மார்க்கிடம், “பேதுருவுடைய உரைகளை எல்லாம் நூலாக எழுதமுடியுமா?” என வேண்டுகோள் விடுத்தார்கள். பேதுரு ஒருவேளை கொல்லப்பட்டால் இயேசுவின் போதனைகள் அவருடன் அழிந்து போகக்கூடாது என்பதே அவர்களுடைய நோக்கமாய் இருந்தது.

அப்படி உருவானது தான் ‘மார்க் நற்செய்தி’ என ஆதிகால திருச்சபைப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. தொடக்கத்தில் இதை பேதுருவின் நற்செய்தி என்றும் அழைத்தனர்.

பேதுரு பரபரப்பானவர். அவரைப் பற்றி பிற நற்செய்திகள் மூலமாக பல செய்திகளை அறிந்து கொள்கிறோம். இயேசு கடல் மீது நடந்து வருவதைக் கண்டதும், ‘நானும் குதித்து நடக்கவா?’ எனக்கேட்டு குதித்தவர் அவர். பரபரப்பு மனிதர். அத்தகைய ஒரு பரபரப்பை மார்க் நற்செய்தி நூல் முழுவதும் காணலாம்.

இயேசுவின் இரண்டரை ஆண்டு கால வாழ்க்கையை விரைவாய் கடக்கிறார். முதல் ஒன்பது அதிகாரங்கள் அதைப் பதிவு செய்கின்றன. பின்னர் அவரது கடைசி கால பயணத்தை சற்றே நிறுத்தி நிதானமாய் விரிவாய் எழுதுகிறார். பத்தாவது அதிகாரம் அந்த ஆறு மாத காலத்தைப் பதிவு செய்கிறது. அதை விட விரிவாக கடைசி வார நிகழ்வை எழுதுகிறார். அதை விட விரிவாக கடைசி நாள், கடைசி மணித்துளிகளை எழுதுகிறார். ஆறு அதிகாரங்கள் அவருடைய கடைசி வாரத்தை மட்டுமே பேசுகின்றன.

இன்றைய நூலாசிரியர்கள் தங்களை முதன்மைப்படுத்த முயல்வார்கள். ஆனால் அதற்கு நேர் எதிரான மனநிலை பைபிள் ஆசிரியர்களிடம் உண்டு. தங்களை அவர்கள் முன்னிலைப்படுத்துவதில்லை. பேதுருவின் உரைகளை எழுதிய இந்த மார்க் நூல் கூட பேதுருவின் பலவீனங்களையே அதிகமாய்ப் பதிவு செய்கிறது.

‘அப்பாலே போ சாத்தானே’ என பேதுருவை இயேசு திட்டுவதை மார்க் தான் சொல்கிறது. இயேசுவை மூன்று முறை மறுதலிப்பதை மார்க் தான் சொல்கிறது. அதே நேரம் பேதுருவின் சிறப்புகளை பிற நற்செய்தி நூல்கள் விளக்குகின்றன.

‘இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்’ என்பதும், மறுதலித்த பின்னர் இயேசு பேதுருவிடம் பேசுவதையும் பிற நற்செய்தி நூல்கள் தான் நமக்கு விளக்குகின்றன. ஏன் நான்கு நற்செய்தி நூல்கள் நமக்குத் தேவை?, ஒன்று போதாதா? எனும் கேள்விக்கான விடை இவற்றில் அடங்கியிருக்கிறது.

தனது நற்செய்தி நூலில் பதினெட்டு புதுமைகளை எழுதிய மார்க், வெறும் நான்கே நான்கு உவமைகளை மட்டுமே எழுதுகிறார். இயேசுவின் செயல்களின் மீது தான் அவருடைய பார்வை இருந்தது. ஒரு சினிமா போல பிறப்பு முதல் இறப்பு வரை அவர் எழுதவில்லை. யோர்தானில் யார்தான் நிற்பது எனும் பார்வையுடன் தான் மார்க் நற்செய்தி ஆரம்பமாகிறது.

படிப்படியாக இயேசு தன்னை வெளிப்படுத்தும் ஒரு பாணியை மார்க் இந்த நூலில் கையாள்கிறார். “நீங்கள் என்னை யார் என சொல்கிறீர்கள்” என கேட்டு, அவர்கள் தன்னை மெசியா என கண்டுகொண்டபின் இயேசுவின் அணுகுமுறையில் மாற்றம் நிகழ்வதையும் மார்க் படம் பிடிக்கிறார். அதுவரை அவர் தன்னை வெளிப்படுத்த வில்லை.

தன்னைப் பற்றிப் பேசவேண்டாமென பேய்களுக்குக் கட்டளையிட்டிருந்தார், யாரிடமும் சொல்ல வேண்டாமென தொழுநோயாளிக்குச் சொன்னார், மகளை உயிர்ப்பித்தபின் தந்தையிடமும் அமைதி காக்கச் சொன்னார், கடைசியில் சீடர்களிடமும் ரகசியம் காக்கச் சொல்கிறார். தந்தையின் வெளிப்படுத்தல் வழியாய் மகன் வெளிப்படவேண்டும் என்பதே அவரது எண்ணம்.

மார்க் நற்செய்தியின் மிகப் பழமையான படிவங்கள் மார்க் 8 -ம் அதிகாரம், 8-ம் வசனத்தின் பாதியுடன் சட்டென முடிவடைகிறது. அதன் பின் 9 முதல் 20 வரையுள்ள வசனங்களை இன்னொருவர் எழுதியிருக்க வேண்டும்.

ஏன் மார்க் சட்டென முடித்தார்?, அவர் கைது செய்யப்பட்டாரா?, அல்லது மார்க் எழுதிய கடைசிப் பகுதியை பேதுரு அங்கீகரிக்கவில்லையா? என எந்த விவரமும் தெரியவில்லை.

- சேவியர்

(தொடரும்)

Next Story