ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு


ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபாடு
x
தினத்தந்தி 24 Dec 2020 1:31 PM GMT (Updated: 24 Dec 2020 1:31 PM GMT)

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி பெண்கள் வழிபட்டனர்.

ஈரோடு, 

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது.

இந்த கம்பத்துக்கு நேற்று ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். கோவில் திருவிழாவையொட்டி தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது.

வருகிற 29-ந்தேதி கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி பொங்கல் விழா மற்றும் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 31-ந்தேதி கோவில் முன்பு நடப்பட்டு உள்ள கம்பம் பிடுங்கப்பட்டு வீரப்பன்சத்திரம் தெப்ப குளத்தில் போடப்படுகிறது. அதைத்தொடர்ந்து அம்மன் வீதி உலா நடக்கிறது.

பின்னர் மஞ்சள் நீராட்டு விழாவும், ஜனவரி மாதம் 1-ந்தேதி மறுபூஜையும் நடக்கிறது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதியின் படி, கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கோவில் விழாக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story