தஞ்சையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


தஞ்சையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 26 Dec 2020 7:53 PM IST (Updated: 26 Dec 2020 7:53 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்புவிழா நேற்று அதிகாலை நடந்தது. அதன்படி தஞ்சை நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 10 நாட்கள் பகல்பத்து உற்சவம் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.

இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பிரசன்ன வெங்கடேச பெருமாள் கடந்து வந்தார். பின்னர் பெருமாளுக்கு தீபாராதனை நடந்தது. கொரோனா பரவல் காரணமாக சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. முக்கிய பிரமுகர்கள் மட்டும் குறைந்தஅளவில் அனுமதிக்கப்பட்டனர்.

சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதுவும் முககவசம் அணிந்தவர்களை மட்டுமே அனுமதித்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோ‌‌ஷம் எழுப்பிபடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி கிடைக்காததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஆனால் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் வெண்ணாற்றங்கரையில் உள்ள பெருமாள் கோவில், தெற்குவீதி கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், கீழவீதி வரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
1 More update

Next Story