விசுவாசத்தினால் கிடைக்கும் மேன்மை


விசுவாசத்தினால் கிடைக்கும் மேன்மை
x
தினத்தந்தி 8 Sep 2023 4:30 PM GMT (Updated: 8 Sep 2023 4:30 PM GMT)

விசுவாசம் என்பது தேவனோடு உள்ள உறவை அடிப்படையாகக் கொண்டது.

அன்புக்குரியவர்களே, விசுவாசம் என்ற வார்த்தையை பைபிளிலும், அநேக பிரசங்கங்களிலும், நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

விசுவாசம் மற்றும் நம்பிக்கை - இந்த இரண்டு வார்த்தைக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன. முதலாவது- அவற்றை சற்று ஆழமாக, தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் வேத வசனத்தில், "உங்கள் விசுவாசமும், நம்பிக்கையும் தேவன் மேலிருக்கும்படி" (I பேதுரு 1:21) என்று சொல்லுகிறபடியால், விசுவாசமும், நம்பிக்கை யும் வேறுவேறு என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

நம்பிக்கை என்பது, 'நாம் விரும்புவதை கடவுள் செய்வார், அல்லது நிறைவேற்றுவார்' என்னும் ஒரு எதிர்பார்ப்பு. ஆகவே, நம்பிக்கையானது நம்முடைய பெற்றோர்கள் பிறர் கூறும் விஷயங்கள் மற்றும் கடவுள் நமக்கு கொடுத்த கல்வி அறிவு மூலமாக நமக்கு உண்டாகும்.

எடுத்துக்காட்டாக, தேர்விற்கோ, விளையாட்டு போட்டிகளுக்கோ செல்லும் மகனிடம் தந்தை, 'கண்டிப்பாக நீ வெற்றி பெறுவாய்' என நம்பிக்கையை கொடுப்பார். மாறாக, விசுவாசம் என்பது யாரும் சொல்லியோ, கற்றுக்கொடுத்தோ அல்லது கல்வி ஞானத்தினாலோ வருவது கிடையாது.

ஒருவர் மேல் நமக்கு உண்டான நம்பிக்கையை தாண்டிய காரியம் தான் 'விசுவாசம்'. அதாவது சில மனிதர்கள் மேல் நம்பிக்கை வைத்திருக்கலாம். சில காரியங்கள் இவ்வாறு நடக்கும், இவர்களால் நடக்கும் என அவர்கள் மேல் எதிர்பார்ப்பு வைத்திருக்கலாம். இவை தான் 'நம்பிக்கை'.

உதாரணமாக வேதத்தில், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி, "நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக் கடவது என்றார்கள்" (தானியேல் 3:17,18).

தானியேலின் புத்தகத்தில் படிக்கும் போது வசனம் இவ்வாறாக சொல்லுகிறதை நாம் காண்கிறோம். இந்த இடத்தில் அந்த இறை மனிதர்கள் மூவரும், நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார் என்று சொல்லுவது, அவர்களுக்கு கடவுள் மேல் உள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

ஆனால் 'விடுவிக்காமற் போனாலும்' என்ற வார்த்தையை வெறும் நம்பிக்கையை வைத்து மட்டும் சொல்ல முடியாது. தேவனோடு உள்ள உறவு, அதனால் உண்டான விசுவாசமே இவர்களை இப்படி பேசவைத்தது.

விசுவாசம் என்பது தேவனோடு உள்ள உறவை அடிப்படையாகக் கொண்டது. திருவிவிலியம் இவ்வாறாக சொல்லுகிறது "விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம்; ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்" (எபிரேயர் 11:6).

இறைவனிடம் நாம் வேண்டுதல் செய்யும்போது, எதிர்பார்க்கும் முடிவுகள் உடனே கிடைத்து விட்டால், 'கடவுள் இருக்கிறார்', 'அவர் நல்லவர்', 'நன்மை செய்கிறவர்' என அறிக்கையிடுவோம். ஒருவேளை நாம் எதிர்பார்க்கும் முடிவுகள் சற்று தாமதிக்கும்போது, இறைவன் மேல் மனஸ்தாபம் ஏற்படும். ஒரு கட்டத்தில் விரக்தியும், வேதனையும் அடைந்து இறைவனை முறுமுறுத்து, சலிப்படைந்து வெறுத்து விடுவோம். இந்த இடத்தில் தான் நமக்கு விசுவாசம் தேவை.

"நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளை கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்" (மத்தேயு 21:22). மேலும் வேதாகமம் இப்படியாகச் சொல்கிறது "அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்" (ரோமர் 8 : 28).

இந்த வசனத்தின்படி தேவனிடத்தில் வெற்றிக்காகவும், விடுதலைக்காகவும், முடிவுக்காகவும் காத்திருக்கிற நீங்கள் உயர்த்தப்படுவதும், தாழ்த்தப்படுவதும், ஆசிர்வதிக்கப்படுவதும், நிந்திக்கப்படுவதும், சோதிக்கப்படுவதும், தோற்கடிக்கப்படுவதும், வெற்றியை ருசிபார்ப்பதும், புறக்கணிக்கப்படுவதும் எல்லாம் தேவனுடைய சித்தமே. அதுவும் நம்முடைய நன்மைக்காகவும், நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதற்காகவும் கர்த்தரே நடத்துகிறார் என அறிந்து, உணர்ந்து செயல்படுவது தான் விசுவாசம் என்பதன் அர்த்தமாகும்.

அப்படிப்பட்ட நிலைப்பாட்டில் இருப்பது தான் உண்மையான விசுவாசமும் கூட…… இப்படிப்பட்ட ``விசுவாசத்தை" நம்முடைய வாழ்க்கையில் அனுபவமாக்கிக் கொள்ள தேவன் நமக்கு உதவி செய்வாராக. இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக. இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்!


Next Story