கண்மணி போல் நம்மை காக்கும் தேவன்....


கண்மணி போல்  நம்மை காக்கும் தேவன்....
x

தெய்வத்தின் பார்வைக்கும், மனிதனின் பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. இது குறித்து வேதாகமத்தில் ஒரு சம்பவத்தை பார்ப்போம்.

பொதுவாக ஒரு மனிதன் இன்னாரு மனிதனை பார்க்கும் போது, அவனது செல்வாக்கு, அந்தஸ்து, ஜாதி, அழகு, குணம், இவைகளை கவனிப்பது வழக்கம். இவ்வாறு வெளித்தோற்றங்களை வைத்து ஒரு மனிதனை தேர்வு செய்தால், அவரது குணநலன்களை தீர்மானித்தால், அவனிடம் நட்பு கொண்டால், அந்த தேர்வு தவறானதாகவே இருக்கும். பணம் வரும் போது மனமும், குணமும் மாறிப்போகும் வழக்கம் மனிதர்களிடம் உண்டு. ஆனால் கர்த்தரின் தேர்வு அப்படி அல்ல. கர்த்தர் மனிதர்களின் முகத்தை பார்ப்பதில்லை, அந்த மனிதரின் அகம் எப்படி உள்ளது என்பதையே பார்ப்பார். அவரது தேர்வுக்கான மதிப்பீடு ஒன்றே ஒன்று தான்.

கர்த்தர் உன் இருதயத்தை பார்க்கிறார். உன்னுடைய இருதயத்தில் நீ அவரை எவ்வளவு நேசிக்கின்றாயோ அதைவிட மிக அதிகமாக அவர் உன்னை நேசிக்கிறார், உன்னை அரவணைக்கிறார், உன்னை தேற்றுகிறார், உன்னை அனுதினமும் கரம் பிடித்து வழி நடத்திச் செல்கிறார். உன்னைச்சுற்றி பின்னப்பட்டுள்ள எல்லா வித வலைகளுக்கும், கண்ணிகளுக்கும், பொறாமைகளுக்கும், எரிச்சலுக்கும், மந்திர, தந்திரங்களுக்கும் உன்னை விலக்கி காப்பவர் அவரே, காரணம் நீ அவரது மகன், மகள். அது மட்டுமே அவரது தேர்வுக்கான காரணம்.

இது தொடர்பான சரித்திர நிகழ்வு இது...

இஸ்ரவேலுக்கு முதல் ராஜாவாக சவுல் என்பவரை கர்த்தர் தேர்வு செய்கிறார். ஆனால் அவர், கர்த்தருக்கு பிரியமானதை செய்யாமல் தன்னுடைய விருப்பம் போல நடக்கிறார். எனவே அவருக்குப் பதிலாக, பெத்லகேம் ஊரில் உள்ள ஈசாயின் மகன்களில் ஒருவரை ராஜாவாக தேர்வு செய்ய கர்த்தர் முடிவு செய்கிறார். இதற்காக இஸ்ரவேலின் தீர்க்கதரிசியான சாமுவேல் என்பவரை பெத்லேகமில் உள்ள ஈசாயின் வீட்டுக்கு அனுப்புகிறார். பெத்லகேமில் உள்ள ஈசாயின் வீட்டிற்கு சாமுவேல் வருகிறார். வரும் போதே பெத்லகேமின் பெரிய மனிதர்கள் சாமுவேலிடம் 'சமாதான காரியமா?' என்று கேட்கிறார்கள். அதற்கு சாமுவேல், 'சமாதானந்தான்' என்று கூறுகிறார். மொத்த ஊரும் அமர்க்களப்படுகிறது. ஈசாயின் வீட்டில் பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.

சாமுவேலின் முன்பாக ஈசாயின் முதல் மகன் எலியாப் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். அப்போது அவருடைய முகத்தையும், சரீர வளர்ச்சியையும் பார்த்து 'இவர் தான் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவரா' என்று சாமுவேல் நினைத்தார். கர்த்தர் சாமுவேலை நோக்கி, 'நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்' என்றார். அதன் பிறகு ஈசாயின் ஏழு மகன்களும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள், கர்த்தர் சாமுவேலிடம், 'இந்த ஏழு பேரையும் நான் தெரிந்து கொள்ளவில்லை' என்கிறார். அப்போது சாமுவேல், 'இந்த ஏழு பேர் தான் உன் மகன்களா?' என்று ஈசாயிடம் கேட்கிறார். அதற்கு ஈசாய், 'இல்லை, கடைசி மகன் ஆடு மேய்க்க சென்றுள்ளார்' என்று கூறுகிறார். 'உடனே அவனை வரச்சொல்லுங்கள், அவர் வரும் வரை நான் பந்தி இருப்பதில்லை' என்று கூறுகிறார்.

தாவீதை அழைத்து வருகிறார்கள். கர்த்தர் சாமுவேலிடம், "இவன் தான் நான் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேலின் புதிய ராஜா, நீ இவனை எண்ணையால் அபிசேகம் பண்ணு" என்கிறார். உடனே தாவீது தேவ மனிதரால் அபிசேகம் பண்ணப்படுகிறார்.சொந்த வீட்டாரால் புறக்கணிக்கப்பட்ட தாவீதை கர்த்தர் தன் ஜனங்களை ஆளும் ராஜாவாக தேர்வு செய்கிறார். கர்த்தர் தாவீதின் இருதயத்தை மட்டுமே பார்க்கிறார்.

இன்றைக்கு நாமும் நம் இருதயத்தில் எல்லாவற்றையும் விட கர்த்தரை நேசிப்போம். அன்பானவர்களே, கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட உன்னை கர்த்தரால் வெறுத்து விட முடியாது. நீ அவரது மகனாக, மகளாக இருக்கிறாய் என்பதை மறவாதே. ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குவது போல் கர்த்தர் உனக்கு இரங்குகிறார், உன்னை தாய் போல் தேற்றுவார், தந்தை போல் தோளில் சுமப்பார், நீ யார் என்பதையும் அறிவார். நீ நன்மை செய்தாலும் சரி, நீ தெரியாமல் தீமை செய்தாலும் சரி, நீ யார் என தேர்வு செய்த கர்த்தர் உன்னை அறிவார். நீ இன்னார் எனவும், நீ பரமபிதாவின் புத்திரர் என்பதையும் பரமபிதா அறிவார்.

நீ யார் என்பதை உன் இருதயத்தை மட்டுமே பார்த்து தேர்வு செய்தவர், தன் இதயத்திலிருந்து உன்னை தூக்கியெறிவாரோ! அவர் இதயத்திலிருந்து உன்னை ஒரு போதும் தூக்கிவீசி வெறுத்திடவேமாட்டார்! ஆருயிர் நேசர், அன்பு கர்த்தர், உங்கள் இருதயத்தை பார்த்து உங்களிடம் அன்பு கூர்ந்து, உங்களை அன்பாகவே தேர்வு செய்துள்ளார். அழைத்தவர், தெரிந்தவர், உண்மையுள்ளவர். ஆகையால், எது வந்தாலும் பயப்படாதிருங்கள். கலங்காதே, திகையாதே. கண்டுன்னை அழைத்தவர், கரம் பிடித்து நடத்துபவர், ஒரு போதும் கைவிடவே மாட்டார். உன்னை தன் கண்மணி போல் பாதுகாப்பார், ஆமென்.

1 More update

Next Story