இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்: தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்


இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்: தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்
x
தினத்தந்தி 13 July 2023 4:30 PM GMT (Updated: 13 July 2023 4:31 PM GMT)

கிறிஸ்து நம்மிடம் குழந்தையைப் போன்ற களங்கமில்லாத தாழ்மையை எதிர்பார்க்கிறார். வரிதண்டுபவரைப் போல் நம் உண்மை நிலை உணர்ந்து கடவுளின் கிருபைக்காய் தாழ்மையாய் மன்றாடுவோம்.

ஒரு கருத்தை வலியுறுத்திக் கூற உவமைகளை பயன்படுத்தும் வழக்கம் ஒவ்வொரு சமுதாயத்திலும் உண்டு. பாலஸ்தீன இயற்கை மரபுகள், நிகழ்ச்சிகளை அறிந்திருந்த ஆண்டவர் இயேசு, நடைமுறை வாழ்விலிருந்து எளிமையான உவமைகளை கூறி, தான் சொல்லவேண்டியக் கருத்தை மக்களுக்கு எளிமையாகப் புரியவைத்தார்.

நம் மன்றாட்டுகளில் தாழ்மையின் முக்கியத்துவத்தை லூக்கா 18:9-14 வரையுள்ள பகுதிகளில் ஆண்டவர் இயேசு ஒரு உவமையின் வழியாக எளிமையாக விளக்குகிறார். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர் (வரி வசூலிப்பவர்). இருவரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் முரண்பட்ட தன்மையுடையவர்கள். அன்றைய பக்தியுள்ள உயர்குல யூதர்களின் பிரதிநிதியாக பரிசேயர் கருதப்பட்டார். யூத சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக வரி வசூலிப்பவர் அடையாளப்படுத்தப்படுகிறார்.

பிறரை இகழ்ந்துரைக்கும் பரிசேயர்கள் நியாயப்பிரமாணத்தைக் கற்றுத் தேறினவர்கள். நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதே மனித வாழ்வின் முக்கிய குறிக்கோள் என்ற எண்ணமுடையவர்கள். தாங்களும் கடுகளவும் தப்பாமல் கடைபிடிப்பவர்கள். எனவே, தாங்கள் மட்டுமே கடவுளின் பிள்ளைகள், ஏனையோர் பாவிகள் என்று நினைப்பவர்கள்.

பரிசேயருடைய மன்றாட்டு மாய்மாலமானது இல்லை. சிமியோன் பென் யோகாய் என்ற யூத ரபி தனது நூலில் 'இந்த உலகில் இரு நீதிமான்கள் உண்டென்றால் அது நானும் எனது மகனும் தான். ஒரு நீதிமான் தான் உண்டென்றால் அது நான்தான்' என்கிறார்.

ஒருவர் தன் நற்பண்புகளை நினைத்து கடவுளுக்கு நன்றி செலுத்துவதில் தவறில்லை, ஆனால் தன் கிரியைகள் மூலம் தான் நீதிமான் என்று கடவுளுக்கு முன்பாக தன்னை உயர்த்தியதோடு, தன்னை முற்றிலுமாக நம்பினார். தன்னை நீதிமானாகக் கருதுவதோடு பிறரை அற்பமாய் எண்ணுகின்றார். 'நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராய் இருந்தபடியால் அந்நியரை சிநேகியுங்கள்' (இ.ச.10:19) என்ற நியாயப்பிரமாணத்தை மீறி பிறரை அற்பமாய் எண்ணுகின்றார்.

இறுதியாக இவர் செய்தது மன்றாட்டேயல்ல, தன் புகழைக் கூறி சுயநீதியை நிலைநாட்டி, தனக்குத்தானே மன்றாடினார். யூதர்கள் பொதுவாக அமைதியாக மன்றாடுவதில்லை. எப்போதும் சப்தமாகவே மன்றாடுவார். ஆனால் இவர் அமைதியாக இருந்து பிறருடைய மன்றாட்டோடு தன் மன்றாட்டை ஒப்புமைப்படுத்துகின்றார். கடவுளிடம் எதையும் பெற விரும்பவில்லை, மாறாக, நான் கடவுளுக்கு கொடுக்கிறேன் என்ற பெருமையுடனும், தான் நிறைவானவன் என்ற இறுமாப்புடனும் காணப்பட்டார்.

தன்னை தாழ்த்தியமற்றொருவர் வரிதண்டுபவர். அன்று பாலஸ்தீனத்தில் இருந்த ரோம ஆளுகைத் தலைவர், நிலவரியை வசூலிக்கும் பொறுப்பு இவர்களுடையது. பாலஸ்தீனாவில் இவர்கள் மிகவும் இழிவாகக் கருதப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டனர். ஏனெனில் வரிசெலுத்துவதை யூதர்கள் கடவுளுக்கு எதிரான குற்றமாகக் கருதினர்.

இங்கே வரிதண்டுபவர் தூரத்தில் நின்று மன்றாடுகிறார். தூய்மைமிகு இறைசமூகத்தில் தான் மாசுள்ளவராய் நிற்பதாய் உணர்கின்றார். தூரத்தில் அல்லது வெகுதூரத்தில் எனும்போது ஆலயத்தில் புறவினத்தார் இருக்குமிடத்திலிருந்து மன்றாடியிருக்கலாம். இறைவனை நேருக்குநேர் காண அஞ்சிப் பார்வையைத் தாழ்த்தி, மார்பில் அடித்துக்கொண்டு மன்றாடுகின்றார்.

'கண்களைத் தாழ்த்தியோ அல்லது மூடிக்கொண்டோ தான் ஜெபிக்க வேண்டும்' என்று சில ரபிமார்கள் உபதேசித்து வந்தனர். ஆனால் இயேசுவின் காலத்தில் கண்களை வானத்துக்கு ஏறெடுத்து ஜெபித்தல் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு முறையாகும். மார்பில் அடித்தல் என்பது மனம்திரும்புதலின் அடையாளம்.

இவருடைய பார்வையில் ஒரே ஒரு பாவி, அது நான்தான் என்ற குற்றவுணர்வோடு கடவுளின் கிருபைக்காக மன்றாடுகின்றார். 'கடவுளே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்' என்ற ஜெபத்தின் வாயிலாக இவர் கடவுளின் கிருபைக்காக, பாவமன்னிப்புக்காக கதறியழுது போராடி ஜெபிக்கின்றார்.

தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவார்

நீதிமானாக தன்னை நினைத்து வந்த பரிசேயர் பாவியாகத் திரும்புகிறார். பாவியாக வந்த வரிதண்டுபவர் நீதிமானாக செல்கின்றார். பரிசேயர் சமூகத்தில் உயர்ந்தவராயிருந்தும் அவர்கள் வழிபாடு, துதி, நன்றிபலி அனைத்தும் இங்கே நிராகரிக்கப்படுகின்றது.

வரிதண்டுபவர் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவராக இருந்தாலும், தன் நிலை உணர்ந்து தன் பாவத்தை அறிக்கையிட்டார். கடவுள் என்னை தன் சொந்தப்பிள்ளையாக ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன் அவர்முன் வீழ்ந்தார், ஏற்றுக்கொள்ளப்பட்டார். இவர்களுடைய ஆவிக்குரிய நிலையை அவரவருடைய மன்றாட்டு பிரதிபலித்தது.

நம் வாழ்வும், மன்றாட்டும் இறைவனுக்கு உகந்ததாக இருக்கின்றதா? நாமும் பல நேரங்களில் தற்பெருமை பேசி பரிசேயரைப் போல் நம் உண்மை நிலையை உணராதவர்களாய் இருக்கின்றோம். மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து, நம்மை நாம் நீதிமான்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். கிறிஸ்து நம்மிடம் குழந்தையைப் போன்ற களங்கமில்லாத தாழ்மையை எதிர்பார்க்கிறார். வரிதண்டுபவரைப் போல் நம் உண்மை நிலை உணர்ந்து கடவுளின் கிருபைக்காய் தாழ்மையாய் மன்றாடுவோம்.

இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்: தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும் (நீதி.29:23).


Next Story