ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி 251 ரன்னில் ஆல்-அவுட்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: நியூசிலாந்து அணி 251 ரன்னில் ஆல்-அவுட்
x
தினத்தந்தி 5 Jan 2020 11:51 PM GMT (Updated: 5 Jan 2020 11:51 PM GMT)

சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து அணி 251 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

சிட்னி, 

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா லபுஸ்சேனின் இரட்டை சதத்தின் உதவியுடன் 454 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்தது. பொறுப்பு கேப்டன் டாம் லாதம் 26 ரன்னுடனும், டாம் பிளன்டெல் 34 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் ‘பாலோ-ஆனை’ தவிர்க்க மொத்தம் 255 ரன்கள் எடுத்தாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் 3-வது நாளான நேற்று நியூசிலாந்து தொடர்ந்து விளையாடியது. நல்ல தொடக்கம் கிடைத்தும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அதை பயன்படுத்திக் கொள்ள தவறினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், தொடக்க ஜோடிக்கு ‘செக்’ வைத்தார். அவரது பந்து வீச்சில் பிளன்டெல் (34 ரன்) போல்டு ஆனார். பொறுப்பு கேப்டன் லாதம் (49 ரன்) கம்மின்சின் வேகத்தில் சிக்கினார்.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்களில் புதுமுக வீரர் கிளென் பிலிப் தவிர வேறு யாரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அதுவும் பிலிப்புக்கு அதிர்ஷ்டம் துணை நின்றது. அவர் 2 மற்றும் 17 ரன்னில் இருந்த போது பந்து வீசிய நாதன் லயனிடமே கேட்ச் ஆகி இருக்க வேண்டியது. இரண்டு முறையும் பந்து கையை தட்டிவிட்டு சென்று விட்டது. இதில் காயமடைந்த லயனுக்கு வலது கை பெருவிரலில் பேண்டேஜ் போட வேண்டியதாகி விட்டது. ஆனாலும் அவரது சுழல் ஜாலம் களத்தில் எதிரொலிக்காமல் இல்லை.

கிளென் பிலிப் 28 ரன்னில் பேட்டின்சனின் பந்து வீச்சில் டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் ஆனார். டி.வி. ரீப்ளேயில், பேட்டின்சன் நோ-பாலாக வீசியது தெரிய வந்ததால் மறுவாழ்வு பெற்றார். இப்படி பல முறை தப்பித்த கிளென் பிலிப் (52 ரன், 115 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) இறுதியில் கம்மின்சின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். இதற்கிடையே மூத்த வீரர் ராஸ் டெய்லர் 22 ரன்னில் வெளியேற்றப்பட்டார்.

முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 95.4 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ‘பாலோ-ஆன்’ ஆனது. நடப்பு தொடரில் நியூசிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். நாதன் லயன் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் எடுப்பது இது 17-வது முறையாகும். ஆனால் இந்த மைதானத்தில் அவர் 5 விக்கெட் சாய்த்திருப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

பின்னர் நியூசிலாந்துக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காத ஆஸ்திரேலிய அணி 203 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் (23 ரன்), ஜோ பர்ன்ஸ்(16 ரன்) களத்தில் உள்ளனர்.

இதுவரை 243 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 4-வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி துரிதமாக ரன்கள் குவிக்க முயற்சிக்கும். அனேகமாக தேனீர் இடைவேளையின் போது டிக்ளேர் செய்து எதிரணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைக்காக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மெக்ராத்தின் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் நேற்றைய தினம் இளஞ்சிவப்பு நிற (பிங்க் டே) நாளாக கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி பெரும்பாலான ரசிகர்கள் மைதானத்திற்கு பிங்க் நிற உடையில் வந்தனர். ஸ்டம்பு, வீரர்களின் பனியனில் பொறிக்கப்பட்ட பெயர், எண், கேலரிகளில் இருந்த போர்டுகள் எல்லாமே பிங்க் நிறத்தில் ஜொலித்தது. வீரர்களுக்கு பிங்க் தொப்பியை மெக்ராத் வழங்கினார்.

Next Story