பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்


பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்
x
தினத்தந்தி 13 May 2020 11:15 PM GMT (Updated: 13 May 2020 7:07 PM GMT)

பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

லாகூர், 

மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்த சர்ப்ராஸ் அகமதுவின் பார்ம் மற்றும் கேப்டன்ஷிப் செயல்பாடு சரியாக இல்லாததால் கடந்த ஆண்டு (2019) அக்டோபர் மாதம் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக அசார் அலியும், 20 ஓவர் போட்டி அணியின் கேப்டனாக பாபர் அசாமும் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. வருகிற ஜூலை மாதம் வரை பாகிஸ்தான் அணிக்கு ஒருநாள் போட்டி எதுவுமில்லை என்பதால் ஒருநாள் போட்டி கேப்டன் பற்றி எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் 2020-2021-ம் ஆண்டுக்கான ஒப்பந்த வீரர்கள் பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. அத்துடன் இந்த சீசனுக்கான (2020-2021) பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டனாக இருந்து வரும் பாபர் அசாம் இனிமேல் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார். ஜூலை 1-ந்தேதி தொடங்கும் இந்த சீசனில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் ஆசிய கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை தவிர 9 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் இருபது 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. பேட்டிங்கில் துடிப்புடன் செயல்பட்டு வரும் 25 வயதான பாபர் அசாம் 20 ஓவர் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். அவர் இதுவரை 26 டெஸ்ட் போட்டியில் விளையாடி 5 சதம் உள்பட 1,850 ரன்னும், 74 ஒருநாள் போட்டியில் ஆடி 11 சதம் உள்பட 3,359 ரன்னும், 38 இருபது ஓவர் போட்டியில் ஆடி 1,471 ரன்னும் எடுத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் மொத்தம் 18 பேர் இடம் பெற்றுள்ளனர். இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, பேட்ஸ்மேன் இப்திகர் அகமது ஆகியோர் புதிதாக இடம் பிடித்துள்ளனர். அசார் அலி, பாபர் அசாம் மற்றும் அபாரமான வேகப்பந்து வீச்சு மூலம் ஒப்பந்தத்தில் ஏற்றம் கண்டு இருக்கும் ஷகீன் ஷா அப்ரிடி ஆகியோர் ‘ஏ‘ பிரிவில் அங்கம் வகிக்கிறார்கள்.

பேட்ஸ்மேன்கள் அபித் அலி, ஷான் மசூத், பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் ஆகியோர் ‘பி‘ பிரிவுக்கு முன்னேறி இருக்கிறார்கள். முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது தர இறக்கம் செய்யப்பட்டு ‘பி‘ பிரிவில் இடம் பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் ஹசன் அலி, முகமது அமிர், வஹாப் ரியாஸ் ஆகியோருக்கு ஒப்பந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் வளர்ந்து வரும் வீரர்கள் பிரிவில் ஹைதர் அலி, ஹாரிஸ் ராப், முகமது ஹஸ்னைன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

ஒப்பந்த வீரர்கள் தேர்வு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவரும், தலைமை பயிற்சியாளருமான மிஸ்பா உல்ஹக் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த 12 மாதங்களில் வீரர்கள் செயல்பட்ட விதம் மற்றும் அடுத்த 12 மாதங்களில் அணிக்கு தேவை என்ன? என்பதை ஆராய்ந்து தகுதியான வீரர்களை தேர்வு குழுவினர் தேர்வு செய்துள்ளனர். அசார் அலி, பாபர் அசாம் ஆகியோரை கேப்டன் பதவியில் நீட்டிக்க செய்து இருப்பது சரியான முடிவாகும். இதன் மூலம் அவர்கள் தங்களது வருங்கால பணி குறித்து தெளிவு பெறுவதுடன் அணியை வலுவாக தயார்படுத்தும் செயல்களை தொடங்க முடியும். ஹசன் அலி காயம் காரணமாக இந்த சீசனில் அதிக போட்டிகளில் விளையாடவில்லை. முகமது அமிர், வஹாப் ரியாஸ் ஆகியோர் குறுகிய வடிவிலான போட்டிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளனர். எனவே அவர்கள் மூவர் குறித்து தேர்வாளர்கள் எடுத்த முடிவு கடினமானது என்றாலும் சரியானதாகும்‘ என்றார்.


Next Story