நாளை நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட்: 'ஆஷஸ்' பெயர் காரணம் தெரியுமா.?


நாளை நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட்: ஆஷஸ் பெயர் காரணம் தெரியுமா.?
x
தினத்தந்தி 7 Dec 2021 12:22 AM GMT (Updated: 7 Dec 2021 12:22 AM GMT)

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.

பிரிஸ்பேன், 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

‘ஆஷஸ்’ என்பது இவ்விரு அணிகளுக்கு இடையே நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெறும் பாரம்பரியமிக்க உணர்வுபூர்வமான ஒரு தொடராகும். அதனால் எப்போதும் நீயா?, நானா? என இரு அணிகளும் ஆக்ரோஷமாக மல்லுக்கட்டுவார்கள்.

ஆஷஸ் பெயர் உருவானது எப்படி?

ஆஷஸ் பெயர் உருவானதற்கு சுவாரஸ்யமான கதையே உண்டு. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1882-ம் ஆண்டு லண்டன் ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 7 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 85 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து அணி 77 ரன்னில் முடங்கியது. இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி பெற்ற முதல் வெற்றி இது தான்.

இங்கிலாந்தின் மோசமான ஆட்டத்தை கண்டு கொதிப்படைந்த அங்குள்ள பத்திரிகை ஒன்று வித்தியாசமான இரங்கல் செய்தியை வெளியிட்டது. அதில், ஓவலில் 1882-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதியில் இங்கிலாந்து கிரிக்கெட் செத்து விட்டது. அதன் உடலை எரித்து சாம்பலை (ஆஷஸ்) ஆஸ்திரேலியா எடுத்து செல்கிறது என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருந்தது. சில வாரங்கள் கழித்து இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா சென்ற போது இழந்த ஆஷசை இங்கிலாந்து மீட்டு கொண்டு வருமா? என்று அந்த பத்திரிகை கேள்வி எழுப்பியது.

அப்போதைய இங்கிலாந்து அணியின் கேப்டன் இவோ பிலிக், ‘இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை மீட்டு வருவோம்’ என்று சூளுரைத்தார். அதன்படி இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அந்த சமயத்தில் மெல்போர்னில் குழுமியிருந்த சில பெண்கள் கலைநயத்துடன் கூடிய சிறிய ஜாடியை இவோ பிலிக்கிடம் பரிசாக அளித்தனர். இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை திரும்ப வழங்குகிறோம் என்பதை குறிப்பிடும் வகையில் ஸ்டம்பின் மீது வைக்கப்படும் பெய்ல்சை எரித்து அதன் சாம்பலை ஜாடிக்குள் வைத்திருந்தனர். இதன் பின்னணியில் தான் ஆஷஸ் பெயர் உதயமானது. இவோ பிலிக் மறைந்த பிறகு அந்த சிறிய ஜாடி 1927-ம் ஆண்டு மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இது இப்போது லண்டன் லார்ட்சில் உள்ள எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மாதிரி கோப்பை தான் ஆஷஸ் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு பரிசாக வழங்கப்படுகிறது.

குறைந்தது 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆஷஸ் தொடரை 33 முறை ஆஸ்திரேலியாவும், 32 தடவை இங்கிலாந்தும் கைப்பற்றி இருக்கின்றன. 6 தொடர் ‘டிரா’வில் முடிந்துள்ளது. கடைசியாக 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

நாளை தொடங்கும் முதலாவது டெஸ்டையொட்டி இரு அணியினரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். பெண் ஊழியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டிம் பெய்ன் விலகினார். இதனால் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா களம் இறங்குகிறது. ஆஸ்திரேலியா உள்ளூரில் எப்போதும் வலுவானது. அந்த அணிக்கு ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், லபுஸ்சேன் ஆணிவேராக உள்ளனர். அத்துடன் பிரிஸ்பேன் அந்த அணிக்கு ராசியானது. கடந்த 33 ஆண்டுகளில் இங்கு ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே தோற்று இருக்கிறது.

அதே சமயம் மீண்டும் ஆஷஸ் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து அணியினர் வியூகங்களை வகுத்துள்ளனர். கேப்டன் ஜோ ரூட் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை சதம் அடித்ததில்லை என்ற ஏக்கத்தை தணிக்க ஆர்வமுடன் உள்ளார். பேட்டிங்கில் ஜோ ரூட், பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, பென் ஸ்டோக்ஸ், பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஆலி ராபின்சன் உள்ளிட்டோர் அந்த அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், டென்3, டென்4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story