இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20: வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது வெஸ்ட்இண்டீஸ்..!


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20: வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது வெஸ்ட்இண்டீஸ்..!
x
தினத்தந்தி 31 Jan 2022 11:21 PM GMT (Updated: 31 Jan 2022 11:21 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

பிரிட்ஜ்டவுன்,

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஜாசன் ஹோல்டர் 4 பந்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று முன்தினம் பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிரான்டன் கிங் 34 ரன்னும், கைல் மேயர்ஸ் 31 ரன்னும் (19 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் பொல்லார்ட் 41 ரன்னும் (25 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), ரோமன் பவெல் 35 ரன்னும் (17 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இருவரும் கடைசி 4 ஓவரில் 66 ரன்கள் திரட்டி அசத்தினர். இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரஷித், லியாம் லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாசன் ராய் (8 ரன்), டாம் பான்டன் (16 ரன்) விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். 3-வது வீரராக களம் கண்ட ஜேம்ஸ் வின்சி அதிரடியாக மட்டையை சுழற்றினார். அவர் 35 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 55 ரன்கள் எடுத்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் அகேல் ஹூசைன் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முன்னதாக அவருடன் இணைந்த பொறுப்பு கேப்டன் மொயீன் அலி 14 ரன்னிலும், லியாம் லிவிங்ஸ்டன் 6 ரன்னிலும் ‘அவுட்’ ஆனார்கள். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ் அடித்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த அணி கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தது. கடைசி ஓவரை மித வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ஹோல்டர் வீசினார். அவர் முதல் பந்தை நோ-பாலாக போட்டார். அதில் 2 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. 2-வது பந்தில் கிறிஸ் ஜோர்டான் (7 ரன்) மாற்று ஆட்டக்காரர் ஹைடன் வால்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3-வது பந்தில் சாம் பில்லிங்ஸ் (41 ரன்கள், 28 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) ஹைடன் வால்சிடம் சிக்கி நடையை கட்டினார். 4-வது பந்தில் அடில் ரஷித் (0) ஒடியன் சுமித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் ஜாசன் ஹோல்டர் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் வெஸ்ட்இண்டீஸ் பவுலர் என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் நிகழ்த்தப்பட்ட 27-வது ‘ஹாட்ரிக்’ சாதனையாக இது பதிவானது.

5-வது பந்தில் சாகிப் மக்மூத் (0) போல்டு ஆனார். இதனால் ஜாசன் ஹோல்டர் தொடர்ந்து 4 பந்தில் 4 விக்கெட்டுகளை சாய்த்து மற்றொரு சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் ஜாசன் ஹோல்டர் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 4 பந்தில் 4 விக்கெட்டுகள் அள்ளிய 4-வது பந்து வீச்சாளர் என்ற சிறப்பை சொந்தமாக்கினார். இதற்கு முன்பு இத்தகைய சாதனையை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், அயர்லாந்தின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கர்டிஸ் கேம்பெர் ஆகியோர் படைத்துள்ளனர்.

19.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 162 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் ஜாசன் ஹோல்டர் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டும், அகேல் ஹூசைன் 30 ரன்கள் வழங்கி 4 விக்கெட்டும் சாய்த்தனர். ஜாசன் ஹோல்டர் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார். அவர் இந்த தொடரில் மொத்தம் 15 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார். இதன் மூலம் ஜாசன் ஹோல்டர் இரு நாடுகள் இடையிலான 20 ஓவர் தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் தன்வசப்படுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது மற்றும் 3-வது போட்டியில் வெஸ்ட்இண்டீசும், 2-வது மற்றும் 4-வது போட்டியில் இங்கிலாந்தும் வென்று இருந்தன.

Next Story