2024 ஒலிம்பிக்கிற்கு முன்பு அணியின் நிலையை அறிய எப்ஐஎச் புரோ லீக் உதவும்: இந்திய ஆக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்


2024 ஒலிம்பிக்கிற்கு முன்பு அணியின் நிலையை அறிய எப்ஐஎச் புரோ லீக் உதவும்: இந்திய ஆக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்
x

image courtesy; instagram/harmanpreet_13

தினத்தந்தி 23 July 2023 5:42 AM GMT (Updated: 23 July 2023 5:44 AM GMT)

2023-2024ஆம் ஆண்டிற்கான எப்ஐஎச் புரோ லீக் சீசன் 5-க்கான ஆட்டங்களை சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு(எப்ஐஎச்) அறிவித்துள்ளது.

டெல்லி,

2023-2024ஆம் ஆண்டிற்கான எப்ஐஎச் புரோ லீக் சீசன் 5-க்கான ஆட்டங்களை சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு(எப்ஐஎச்) கடந்த வியாழன் அன்று அறிவித்திருந்தது. இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டுமே தங்களது முதல் ஆட்டங்களை இந்தியாவிலேயே தொடங்க உள்ளன.

இந்நிலையில் எப்ஐஎச் போட்டிகள் குறித்து இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் கேப்டன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கூறுகையில்,' இந்த தொடர் பாரீசில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு அணியின் நிலையை அறிய உதவும்' என்று கூறினார்.

மேலும் அவர் 'இந்திய அணி எப்ஐஎச் லீக் தொடரின் தொடக்க போட்டிகளில் ஸ்பெயின்,நெதர்லாந்து,ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. கடந்த சீசனில் நாங்கள் நன்றாக செயல்பட்டோம். இந்த சீசனில் அதை விட சிறப்பாக செயல்பட முயற்சிப்போம். போட்டி நடைபெறும் மைதானங்களில் ஒன்றான ரூர்கேலாவில் உள்ள பிர்ஸா முண்டா ஆக்கி மைதானத்தில் நாங்கள் தோல்வியே சந்திக்கவில்லை அதை தொடருவோம்' என்று கூறி உள்ளார்.

இந்திய ஆண்கள் ஆக்கி அணி இந்த சீசனுக்கான முதல் போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக அடுத்த ஆண்டு பிப்ரவரி 24-ல் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் விளையாட உள்ளது. கடந்த எப்ஐஎச் சீசனில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி 4-வது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய மகளிர் ஆக்கி அணி எப்ஐஎச் நேஷன்ஸ் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்று, எப்ஐஎச் புரோ லீக்கிற்கு தகுதி பெற்று உள்ளனர்.

இந்திய பெண்கள் அணியின் கேப்டன் சவிதா இது கூறித்து கூறுகையில்,' எப்ஐஎச் புரோ லீக் தொடருக்கு நாங்கள் தகுதி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த தொடரில் தரவரிசையில் முன்னிலையில் உள்ள அணிகளுடன் மோத உள்ளோம். அவர்களுக்கு எதிராக நல்ல முடிவை பெற முயற்சிப்போம் . இந்த தொடர் ஒலிம்பிக் போட்டிக்கு முன் அணியின் நிலை மற்றும் திறமைகளை மேம்படுத்த உதவும்' என்று கூறி உள்ளார்.

இந்திய பெண்கள் ஆக்கி அணி முதல் போட்டியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி சீனாவுக்கு எதிராக புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் விளையாட உள்ளது.


Next Story