'வெற்றி என்ற வார்த்தையை சொல்ல 15 ஆண்டுகள்' - ப்ளூ ஸ்டார் குறித்து சாந்தனு நெகிழ்ச்சி

'ப்ளூ ஸ்டார்' படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று முன்தினம் வெளியானது.

Update: 2024-01-27 05:51 GMT

சென்னை,

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டரை நடிகர் சாந்தனு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'நான் நடிக்க தொடங்கியதில் இருந்து வெற்றி என்ற வார்த்தையை சொல்ல 15 ஆண்டுகள், 4 மாதங்கள் அதாவது 5,600 நாட்கள் காத்திருந்தேன். இது அனைத்திற்கும் காரணம் நீங்கள்தான் மக்களே.

உங்களின் அளவுகடந்த அன்பு மற்றும் அதரவு மட்டுமே இத்தனை ஆண்டுகள் என்னை நிற்காமல் ஓட வைத்துள்ளது. இதற்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். 'ப்ளூ ஸ்டார்' எனக்கு சிறப்பானது. நீங்கள்தான் இதனை எனக்கு சிறப்பாக மாற்றிக் கொடுத்துள்ளீர்கள். நன்றி.. வெற்றிநடை போடுகிறது' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் சாந்தனுவை பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்