நடிகை ஆர்த்தி அ.தி.மு.க.வில் இருந்து விலகல்

அரசியலில் நடித்து மக்களை ஏமாற்ற தெரியாததால், அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக டி.டி.வி.தினகரனுக்கு, நடிகை ஆர்த்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

Update: 2017-03-23 21:45 GMT
சென்னை, 

இதுதொடர்பாக டி.டி.வி.தினகரனுக்கு, நடிகை ஆர்த்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

களங்கம்

ஜெயலலிதா மேல் கொண்ட அதீத அன்பாலும், அவரது தைரியம், துணிச்சல், தன்னம்பிக்கை போன்ற குணங்களாலும் ஈர்க்கப்பட்டு என்னை 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவின் ஆசியுடன் கட்சியில் இணைத்துக்கொண்டு, உண்மை விசுவாசியாகவும், அ.தி.மு.க.வின் இளைய நட்சத்திர பேச்சாளர் என்ற பதவி அந்தஸ்துடன் உளமாற பணியாற்றினேன்.

ஆனால் தற்போது அ.தி.மு.க.வில் நடைபெறும் நிகழ்வுகளால் என் மனம் புண்பட்டுவிட்டது. ஜெயலலிதா நம்மை விட்டுச்சென்று 4 மாதங்களுக்குள் இரட்டை இலை சின்னத்தையும், ஜெயலலிதா இந்தியாவின் 3-வது மிகப்பெரிய கட்சியாக அ.தி.மு.க.வை உயர்த்திய உழைப்புக்கும், பெயருக்கும், புகழுக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டோம்.

மனசாட்சி இடம்தரவில்லை

இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகரில் அ.தி.மு.க.வின் பெயரும், இரட்டை இலை சின்னமும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. இதுதான் அனைவரின் சுயநலத்திற்கும், பதவி ஆசைக்கும் கிடைத்த மாபெரும் பரிசு. இதுதான் நம் ஜெயலலிதாவின் ஆசையா? நம்மை கட்டுக்கோப்புடன் வழி நடத்தியதற்கு சன்மானமா? ஜெயலலிதாவை நாம் இழந்தாலும் அவரின் கனவுகளை நாம் மறக்கலாமா?

ஜெயலலிதாவின் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டாமா? இவையனைத்தையும் மறந்து தனித்தனியே கட்சியை உடைப்பதும், பதவி ஆசைக்காக ஜெயலலிதா நினைவிடத்தில் நாடகங்கள் நிகழ்த்துவதும் அ.தி.மு.க.வின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் கொள்கைக்கே இழுக்கு ஏற்படுத்தும் வண்ணம் நடப்பதும் மிகுந்த வேதனை தருகிறது.

நம் சின்னம், நம் கழகத்தின் பெயர் காக்க ஒன்றுபடுவதை விடவா பதவி, ஆட்சி அதிகாரம் முக்கியம். இவை அனைத்தையும் கண்டுகொண்டு இருக்க என் மனசாட்சி இடம்தரவில்லை. ‘மக்களால் நான் மக்களுக்காக நான்’ என்று ஜெயலலிதா கூறினார். இங்கு மக்கள் நலன் பற்றி சிந்திக்க நேரமில்லை.

ராஜினாமா செய்கிறேன்

சின்னத்துக்காக சண்டை போடுவதை விட்டுவிட்டு மக்கள் எண்ணங்களுக்காக முக்கியத்துவம் தாருங்கள். இத்தருணத்தில் ஒன்றுபட்டு கட்சி சின்னத்தையும், மக்கள் மனதில் நற்பெயரையும் மீட்டெடுத்து ஜெயலலிதாவின் ஆசியுடன் இடைத்தேர்தலை சந்தியுங்கள். ஜெயலலிதாவின் ஆத்மா மகிழ்ச்சியுறும்.

நான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து இன்று நகைச்சுவை நடிகையாக திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் அரசியலில் நடித்து மக்களை ஏமாற்ற தெரியாததால் மிகுந்த மனவேதனையுடன் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்