வாழ்க்கையை அழகாக மாற்றும் ரித்திக்ரோஷன்

பிரபல இந்தி நடிகர் ரித்திக்ரோஷன் ‘காபில்’ படத்தில் பார்வையற்றவராக நடித்து, பாராட்டுகளை பெற்றிருக்கிறார். கண்தெரியாதவர்களின் தேடல், தடுமாற்றம் போன்றவைகளை இயல்பாக கொண்டு வருவதற்கு அவர் ரொம்ப சிரமப்பட்டிருக்கவும் செய்கிறார்.

Update: 2017-09-24 06:55 GMT
பிரபல இந்தி நடிகர் ரித்திக்ரோஷன் ‘காபில்’ படத்தில் பார்வையற்றவராக நடித்து, பாராட்டுகளை பெற்றிருக்கிறார். கண்தெரியாதவர்களின் தேடல், தடுமாற்றம் போன்றவைகளை இயல்பாக கொண்டு வருவதற்கு அவர் ரொம்ப சிரமப்பட்டிருக்கவும் செய்கிறார்.

“பார்வையற்றவராக நடிப்பதற்கு எனக்கு பயிற்சி தேவைப்பட்டது. அதற்காக கண்தெரியாதவர்களோடு பழகினேன். அவர்களது உணர்வுகளை எல்லாம் உடனிருந்து கவனித்தேன். கூடுதலாக நான் சண்டை போடவேண்டியதிருந்தது. காதல் செய்யவேண்டியதிருந்தது. எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்டு இயல்பாக செய்தேன்.

பார்வையற்றவர்களின் மனதில் எப்போதும் ஒரு ஏக்கம் இருக்கும். சுற்றி இருக்கும் சூழ்நிலையை உணர்ந்து அவர்கள் நடந்து கொண்டாலும், இந்த உலகை பார்க்க முடியவில்லையே என்ற எண்ணம் அவர் களுக்குள் இருந்துகொண்டிருக்கும். நான் பயிற்சிக்காக சென்றபோது என்னோடு பழகிய பார்வையற்றவர்கள், அவர்களது உணர்வுகளை என்னோடு பகிர்ந்துகொண்டார்கள். ‘ரோஷன்ஜீ உங்களை பார்க்க முடியவில்லையே!’ என்ற ஏக்கத்தோடு அவர்கள் என்னை தொட்டுத் தொட்டுப் பார்த்தபோது என் உள்ளத்தை எதுவோ பிசைந்தது. கண்கலங்கிவிட்டேன். கண் எவ்வளவு முக்கியமான உறுப்பு என்பது நமக்கு பார்வை தெரியாதபோதுதான் புரியும்.

நான் பார்வையற்றோரின் நலனுக்காக உதவியிருக் கிறேன். ஐஸ்வர்யாராய் கண் தானம் செய்ய அழைப்பு விடுத்தபோது நானும் அதில் பங்கேற்றேன். கண் தானம் என்பது மிகப்பெரிய விஷயம்” என்று கூறும் அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறார்.

“என் வாழ்க்கையில் மிகப்பெரிய திடீர் திருப்பங்கள் உருவாகிவிட்டன. என் மனைவி சுஜைன் விவாகரத்து, கங்கணாவின் வீண்பழி போன்ற பல விஷயங்கள் என் வாழ்க்கையில் வந்து போய்விட்டது. அதற்காக என் நடிப்பு நின்று போய்விடவில்லை. நடிப்பு என் வாழ்க்கையாகிவிட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை என் நிஜவாழ்க்கை பாதித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக் கிறேன்.

சினிமாவின் வெற்றிதான் என் வெற்றி. அதனால் எங்கள் தயாரிப்பு என்றாலும், அடுத்தவர்கள் தயாரிப்பு என்றாலும் நான் சிறப்பாக நடிக்கிறேன்.

என் தந்தை தொழிலில் ரொம்ப கண்டிப்பானவர். சரியான நேரத்திற்கு எல்லாம் நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார். நானும் அவரை ஒரு நல்ல தயாரிப்பாளராகவே பார்த்து பழகிவிட்டேன். அதனால் அவருடைய கண்டிப்பு எந்த விதத்திலும் என்னை பாதித்ததில்லை. அவரது செயல்பாடு எல்லாமுமே என் முன்னேற்றத்திற்கான முயற்சி என்பது எனக்குத் தெரியும்.

‘கிரிஷ்’ படத்தில் நடித்தபோது கடுமையான முதுகு வலியில் அவதிப்பட்டேன். அப்போதும் படத்திற்கான சண்டைக் காட்சிகளை முழுமையாக செய்து முடித்தேன். என் வலியும் வேதனையும் அந்த படத்தின் தயாரிப்பாளரான அப்பாவிற்கு தெரியும். என் கஷ்டங்களை எல்லாம் புரிந்துகொண்ட அவர் வீட்டிற்கு வந்து என்னிடம் மன்னிப்புகேட்டார். தன்னைப்போல ஒரு கொடுமைக்கார அப்பா யாரும் இருக்க முடியாது என்று வருத்தப்பட்டார். ஆனால் அப்பா மீது நான் ஒருபோதும் வருத்தம் கொள்வதில்லை. ஏன்என்றால் நான் அவரை அப்பாவுக்கு அப்பால் ஆசானாகவும் மதிக்கிறேன். நான் மரணவலியில் நடித்த கிரிஷ் படம், வெளிவந்தபோது நான் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தேன்.

நான் வாழ்க்கையில் உடலாலும், மனதாலும் பல வலிகளை சந்தித்துவிட்டேன். அதெல்லாம் தவிர்க்க முடியாதது. இத்தனையையும் மீறி நான் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். அந்த மனஉறுதியை எனக்கு அப்பாதான் கொடுத்திருக்கிறார்.

என் குழந்தைகள் மீது நான் மிகுந்த அன்பு வைத் திருக்கிறேன். அவர்களோடு விளையாடுவது எனக்குப் பிடிக்கும். அவர்களை அழைத்துக் கொண்டு வெகுதூரம் செல்வது அவர்களுக்குப் பிடிக்கும். அவர்களுடைய எதிர்காலத்தை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு எனது கடமையை நான் செய்துகொண்டிருக்கிறேன்.

எனது தந்தை நான் நடிகனாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் சிறுவனாக இருந்தபோதே எனக்கு நடிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தார். நான் கல்லூரிப் படிப்பை முடித்ததும் என்னை முழுநேர நடிகனாக மாற்றினார்.

நான் நடிகராக ஆவதற்கு முன்பு என் அப்பாவோடு அலுவலகம் செல்வேன். அங்குள்ள அலுவலக பணிகளை எல்லாம் நான் பார்வையிடுவேன். அந்த வேலைகளை எல்லாம் செய்யவும் பழகிக்கொண்டேன். நான் எதிலும் கவுரவம் பார்த்ததில்லை. எங்கள் அலுவலகத்தைகூட சுத்தம் செய்திருக் கிறேன். 17 ஆண்டுகளுக்கு முன்னால் நான் முழுநேர நடிகனானேன்.

வாழ்க்கை என்பது வேண்டாத பல விஷயங்களையும் கொண்டதுதான். ஆனால் நாம் நினைத்தால் அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பது ஆறுதலைத் தருகிறது. என் மொழியில் சொன்னால் வாழ்க்கையை நாம் மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ள மனஉறுதி தேவை. ‘ஜிம்’ எப்படி நம் உடலுக்கு தேவையற்ற விஷயங்களை நீக்கி நம்மை அழகாக்கு கிறதோ அதுபோல் மனபயிற்சி மூலம் நம் தேவையற்ற நினைவுகளை தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையை அழகாக்கிக்கொள்ளலாம்” என்கிறார். 

மேலும் செய்திகள்