கட்டுடலுக்காக போராடும் நட்சத்திரங்கள்

ஆரோக்கியத்தையும், அழகையும் பாதுகாப்பதில் நடிகர்-நடிகைகள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு நேரத்தை ஒதுக்கிவிடுகிறார்கள்.

Update: 2017-11-19 06:22 GMT
ரோக்கியத்தையும், அழகையும் பாதுகாப்பதில் நடிகர்-நடிகைகள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்வதற்கு நேரத்தை ஒதுக்கிவிடுகிறார்கள். வெளியே சென்று உடற்பயிற்சி செய்வது சிரமம் என்பதால் வீட்டிலேயே ‘ஜிம்’ வைத்து கிடைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறார்கள். தங்களுக்கென்று தனியாக பயிற்சியாளரையும் நியமித்திருக்கிறார்கள். உடலழகு போனால் சினிமா வாய்ப்பு பறிபோய்விடும் என்பது அவர்களுக்கு தெரியும். உடற் பயிற்சி மூலம் தங்கள் கட்டழகை பாதுகாக்கும் சில நடிகர், நடிகைகளின் அனுபவங்களை கேட்போம்!

ஜான் ஆப்ரகாம்

இந்தி திரை உலகில் கட்டழகுக்கு எடுத்துக்காட்டாக இவரை தான் குறிப்பிடுகிறார்கள். “தினமும் சாப்பிடுவது போல, உடற் பயிற்சியும் எனக்கு அவசியம். ஆரோக்கியமான உடலுக்கு மூன்று விஷயங்கள் அவசியம் என்று நான் கருதுகிறேன். நல்ல உணவு, உடற்பயிற்சி, சரியான தூக்கம் இந்த மூன்றும் தான் அவை. உணவு, உடற்பயிற்சி இரண்டும் நாம் தூங்கும்போதுதான் வேலைசெய்யும். முழுமையான ஓய்வின்போதுதான் நமது உடல் முறையாக இயங்கும். அதனால் ஆழ்ந்த தூக்கம் மிக முக்கியமானது.

ஒவ்வொருவருடைய உடலும் வெவ்வேறு மாதிரியான இயல்பைக்கொண்டது. அதனால் பொதுவான உடற்பயிற்சிகள் எல்லோருக்கும் பொருந்தாது. நம் உடலமைப்பை நன்கு அறிந்த ஒரு தனி பயிற்சியாளர் நமக்கு மிக அவசியம். உடல், பழுதுபட்ட உறுப்புகளை தூக்கத்தின்போதுதான் சரி செய்யும். உணவில் நாம் சர்க்கரை, உப்பு, எண்ணெய், நெய் போன்றவைகளை தவிர்க்கவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நான் அப்படி எதையும் தவிர்ப்பதில்லை. விருப்பப்பட்ட எல்லா வகை உணவு களையும் அளவோடு சாப்பிடுவேன். செரிமான சக்தி இருக்குமானால் எதையும் பயமின்றி சாப்பிடலாம். நல்ல உணவு ஒருபோதும் நமக்கு விஷமாகாது. செரிமானத்தில் குறை இருந்தால் மட்டுமே உணவு எதிர் விளைவை ஏற்படுத்தும்” என்கிறார்.

கங்கணா ரனாவத்

“உடலை கட்டுக்குலையாமல் வைத்துக்கொள்வது ஒவ்வொரு நடிகைக்கும் சவாலான விஷயம். நான் வாரத்தில் 5 நாட்கள் ஜிம்மில் பயிற்சி செய்கிறேன். ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் கடுமையான பயிற்சிகள் செய்வேன். உடற்பயிற்சியோடு சத்துணவும் அவசியம். பெண்கள் உடலின் உள் உறுப்பு களுக்கும் பயிற்சி கொடுக்கவேண்டும். கார்டியோ பயிற்சி அனைவருக்கும் தேவை. அது ரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை நீக்கி இதயத்தை ஆரோக்கியமாக இயங்க வைக்கும். மாசடைந்த சுகாதாரமும் நம் உடலை பாதிக்கும். சுற்றுப்புற சூழல் மாசடைந்திருப்பது நம் ரத்தத்தில் பல்வேறு ரசாயனங்கள் கலக்க காரணமாகிவிடுகிறது. தேவையற்ற அந்த ரசாயனங்களை வெளியேற்றவும் உடற்பயிற்சி அவசியம்”

சைய்ப் அலிகான்

“என் உடலை ஆரோக்கியமாக, கட்டுக்கோப்பாக வைத்திருப்பதைதான் என் வாழ்க்கையின் பெரிய சாதனை என்று சொல்வேன். நான் சினிமாவிற்கு வந்ததும், என் உடலமைப்பிற்காக பலராலும் புகழப்பட்டேன். அது என்னை உற்சாகப்படுத்தியது. என் உடலை நான் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு என் நடன பயிற்சியும், நான் பெற்ற தற்காப்புக்கலை பயிற்சியும் முக்கிய காரணம். நான் சினிமாவிற்கு வந்திருக்காவிட்டால் தற்காப்புக்கலை பயிற்சியாளராகி இருப்பேன். நல்ல பயிற்சியாளரால்தான் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க முடியும் என்று எனது பயிற்சியாளர் என்னிடம் சொன்னார். அது சரிதான். நான் என் உடலை நன்றாக பராமரித்தது, என் நடிப்பிற்கு பயன்படுகிறது. நான் நடனம் ஆடும்போது பலரும் வியந்து போவார்கள். ‘நீ என்ன மனிதனா? ரோபோவா?’ என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு நான் உடலை வளைத்து ஆடுவேன். நாட்டியத்திற்கும், உடலமைப்பிற்கும் நிறைய தொடர்பிருக்கிறது. நல்ல உடலமைப்பு இருந்தால் தான் நாட்டியம் வசப்படும்..”

(உடல் மீது மிகுந்த அக்கறைகாட்டும் இவர், சமீபத்தில் எலக்ட்ரானிக் சாதனம் ஒன்றை வாங்கி கடிகாரம் போன்று கையில் கட்டி யிருக்கிறார். அதில் எவ்வளவு நேரம் தூங்கினார், எத்தனை படிகள் ஏறினார், எத்தனை கிலோ மீட்டர் நடந்தார்.. என்பது போன்ற அனைத்தும் பதிவாகி காட்டுகிறது)

ரவீணா தாண்டன்

“திருமணமான பெண்கள் கொஞ்சம் அசந்தாலும் உடல் எடை கன்னாபின்னாவென்று கூடிவிடும். அதை குறைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். எல்லோரும் நம்மை அழகாக பார்த்த பார்வை இன்று மாறிவிட்டதே என்று நினைக்கும்போது நமது தன்னம்பிக்கையே குறைந்துபோய்விடும். நான் ஒரே மாதிரியான பயிற்சியை தொடர்ந்து செய்வதில்லை. சைக்கிள், நீச்சல், ஸ்கிப்பிங் என்று மாற்றி மாற்றி செய்வேன். எல்லா பயிற்சிகளுக்கும் உடல் வளைந்துகொடுக்கவேண்டும். உடல் எல்லோருக்கும் உள்ளது. அதை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில்தான் நமது திறமை இருக்கிறது”

தீபிகா படுகோன்

“ஒரே நாளில் கட்டுடல் வசப்பட்டுவிடாது. அதை பெற யாராக இருந்தாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். ஆரோக்கியமான உடல்வாகுவைப் பெற ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபாடுகொள்ளவேண்டும். விளையாட்டு சுவாரசியமாக இருக்கும். அதன் மூலம் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் பயிற்சி கிடைக்கும். அதனால் தான் நான் பேட்மிண்டன் தொடர்ந்து விளையாடுகிறேன்”

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

“கட்டுடல் வேண்டும் என்றால், அதற்காக தொடர்ந்து போராடவேண்டும். முறையான உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும் வேண்டும். திடீரென்று அவசர அவசரமாக உடல் எடையை குறைக்க நினைப்பது ஆபத்தானது. சில பெண்கள் திருமணம் நிச்சயித்தவுடன் உடல் எடையை ஒரே மாதத்தில் குறைத்துவிடவேண்டும் என்று ஏதேதோ செய்வார்கள். அப்போது உடலுக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டு விடும். உடல் எடையை குறைப்பதில் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவேண்டும். நான் என் உடல் கவர்ச்சியை காப்பாற்ற ஜிம்முக்கு போகிறேன். நீச்சல் பயிற்சியும் மேற்கொள்கிறேன். ஒரு மணி நேரம் தற்காப்புக்கலை பயிற்சியும், குத்துச்சண்டை பயிற்சியும் பெறுகிறேன். வாரத்தில் மூன்று நாட்கள் கூடைபந்து விளையாடுகிறேன். தினமும் நான் அதிகாலை 4 மணிக்கு விழிக்கிறேன். எனது அன்றாட பணிகளுக்கு மத்தியில் உடலுக்கு தேவையானதையும் செய்கிறேன். உணவிலும் நான் மிகுந்த அக்கறை செலுத்துகிறேன். நான் எப்போதும் வீட்டு சாப்பாட்டையே விரும்பி சாப்பிடுகிறேன். சுத்தமான பசுவின் நெய் சாப்பிடுவது பெண்களின் உடலுக்கு நல்லது. அது மூட்டுகளுக்கு வலிமை தரும். எலும்புக்கும் நல்லது. நெய் சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்யவேண்டும். கிரீன் டீ யும் உடலுக்கு நலம் தரும்” 

மேலும் செய்திகள்