லாபம் குவிப்பதால் ‘பேய்’களுக்கு கடும் கிராக்கி

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டும் கணிசமான எண்ணிக்கையில் பேய் படங்கள் தயாராகின்றன.

Update: 2018-02-02 22:15 GMT
டந்த ஆண்டு 200-க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வந்தன. இதில் புதுமுக நடிகர்கள் படங்களுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடிவரை செலவிட்டனர். பெரிய நடிகர்களின் படங்கள் ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரை அதிக பட்ஜெட்டில் வந்தன.

சில முன்னணி கதாநாயகர்கள் படங்களின் செலவு ரூ.50 கோடியை தாண்டியது. இவற்றில் அதிகப்படியான படங்களுக்கு போட்ட முதலை கூட எடுக்க முடியாமல் தயாரிப்பாளர்கள் நஷ்டப்பட்டனர். புதுமுக நடிகர்களின் படங்களை ஒரு நாளிலேயே தியேட்டர்களில் இருந்து தூக்கி விட்டனர். 90 சதவீதம் படங்கள் நஷ்டமடைந்தன என்று வினியோகஸ்தர் ஒருவர் கூறினார்.

ஆனால் கடந்த வருடம் வெளிவந்த பேய் படங்கள் மட்டும் நல்ல லாபம் பார்த்தன. குறைந்த செலவிலேயே இந்த படங்களை எடுத்து இருந்தனர். பல வருடங்களுக்கு முன்பிருந்தே சந்திரமுகி, அருந்ததி படங்களில் இருந்து தமிழ் திரையுலகில் பேய் சீசன் தொடங்கி விட்டது. முனி, பீட்சா, யாவரும் நலம், அனந்தபுரத்து வீடு, அரண்மனை என்று 50-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் வந்து அதிக வசூல் பார்த்தன.

சித்தார்த் நடித்து கடந்த வருடம் வெளி வந்த ‘அவள்’ பேய் படம் பெரிய படங்களின் வசூல்களை முறியடித்து வெற்றிகரமாக ஓடியது. மாயா, பலூன், டார்லிங், காஞ்சனா-2, ஆ என்று பல பேய் படங்களுக்கும் தியேட்டர்களில் வசூல் கொட்டின.

இதனால் தொடர்ந்து இந்த வருடமும் அதிக எண்ணிக்கையில் பேய் படங்கள் தயாராகி வருகின்றன.

லாரன்ஸ் காஞ்சனா பேய் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். திரிஷா நடித்துள்ள மோகினியும் பேய் படமாக தயாராகி உள்ளது. இதில் திரிஷா பேயாகவே நடித்து இருக்கிறார். வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு உள்ள மோகினிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

செல்வராகவன் இயக்கி வரும் நெஞ்சம் மறப்பதில்லை படமும் பேய் கதை. பிரபுதேவா-தமன்னா நடிப்பில் வெளியான தேவி பேய் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம், இமைக்கா நொடிகள் படங்களும் பேய் கதைகள். இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்பட 20-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் தயாரிப்பில் உள்ளன. 

மேலும் செய்திகள்