நடிகை சாவித்திரி வாழ்க்கை கதை படத்தில் 3 கதாநாயகிகள்

சாவித்திரி வாழ்க்கை கதையை அவர் சொல்வது போன்று திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-02-20 22:30 GMT
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் சினிமா படமாக தயாராகிறது. சாவித்திரியின் சிறுவயது வாழ்க்கை, சினிமாவில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது, நடிகர் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்து கொண்டது, பின்னர் சொந்த படம் எடுத்து சொத்துக்களை எல்லாம் இழந்து இறுதி காலத்தில் வறுமையில் வாடி இறந்தது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இடம்பெறுகின்றன.

சாவித்திரி குடும்பத்தினர், நண்பர்கள், பழம்பெரும் நடிகர்கள் ஆகியோரிடம் பேசி தகவல்கள் திரட்டி நாக் அஸ்வின் இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் சாவித்திரி வேடத்தில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சாவித்திரி போன்று தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார்.

சமந்தா பத்திரிகை நிருபராக வருகிறார். சாவித்திரி வாழ்க்கை கதையை அவர் சொல்வது போன்று திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது அனுஷ்காவும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாவித்திரிக்கு உதவிகள் செய்து நெருங்கிய தோழியாக இருந்தவர், பானுமதி என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் சாவித்திரியின் கணவர் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். நடிகர் நாகேஸ்வரராவ் கதாபாத்திரத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமான விஜய் தேவரகொண்டாவும், எஸ்.வி.ரங்காராவ் கதாபாத்திரத்தில் நடிகர் மோகன்பாபுவும் நடிக்கிறார்கள்.

ஏற்கனவே சில்க் சுமிதா வாழ்க்கை சினிமா படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதில் சில்க் சுமிதா வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. மகாநதி படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்