கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தில் எம்.ஜி.ஆர். ஜோடி, ஜெயலலிதா

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படம் கிராபிக்ஸ்சில் உருவாகிறது

Update: 2018-02-24 23:15 GMT
மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் 28 படங்களில் ஜோடியாக நடித்து இருந்தார்கள். இப்போது தயாராகி வரும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ என்ற ‘அனிமேஷன்’ படத்தில், ‘கிராபிக்ஸ்’சில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா இருவரையும் நடிக்க வைத்து இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறினார்.

“கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, எம்.ஜி.ஆரின் கனவு படம். அவர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை அடுத்து இந்த படம் தயாராகும் என்று அவர் அறிவித்தார். அதற்குள் அவர் முதல்-அமைச்சர் ஆகிவிட்டதால், அந்த படத்தை அவரால் உருவாக்க முடியவில்லை. எம்.ஜி.ஆருடன் என் தந்தை ஐசரி வேலன், 25 படங்களில் நகைச்சுவை வேடங்களில், இணைந்து நடித்து இருந்தார்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த வேளையில், அவருடைய கனவு படைப்பான ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில், ‘கிராபிக்ஸ்’சில் தயாரிக்க முடிவு செய்தோம். அதன்படி, எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான ஜனவரி 17-ந் தேதி, சென்னை சத்யா ஸ்டுடியோவில், ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தின் தொடக்க விழா நடந்தது.

அந்த விழாவில், ரஜினிகாந்த் கலந்து கொண்டு ‘கிளாப்’ அடித்தார். கமல்ஹாசன் கேமராவை ‘ஆன்’ செய்தார். லதா, சவுகார் ஜானகி, வெ.ஆ.நிர்மலா, சச்சு உள்பட எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகைகள் பலரும் கலந்து கொண்டார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் எம்.ஜி.ஆரிடம் பணிபுரிந்த உதவியாளர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு,’ ஒரு அனிமேஷன் படமாக தயாராகி வருகிறது. எம்.ஜி.ஆரின் அடுத்த பிறந்தநாளில், அதாவது 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்.

எம்.ஜி.ஆருடன், ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், எங்கள் தங்கம், ரகசிய போலீஸ் 115, குடியிருந்த கோவில், புதிய பூமி, தனிப்பிறவி, அன்னமிட்ட கை உள்பட 28 படங்களில், அவருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்து இருந்தார்.

29-வது படமாக, ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தில் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் ‘கிராபிக்ஸ்’சில் நடிக்க வைத்து இருக்கிறோம். இதற்காக எங்கள் பட நிறுவனம் பெருமைப்படுகிறது.” இவ்வாறு ஐசரி கணேஷ் கூறினார்.

மேலும் செய்திகள்