நாசர் பெயரில் பொதுமக்களிடம் நிதி வசூல்... நடிகர் சங்கம் போலீஸில் புகார்

நடிகர் நாசர் பெயரில் போலி பேஸ்புக், எக்ஸ் தளப் பக்கங்களை ஆரம்பித்து மோசடி செய்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-30 12:01 GMT

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக நடிகர் நாசர் பதவி வகித்து வருகிறார். இவரது பெயரில் சிலர் போலியாக பேஸ்புக், எக்ஸ் தளப் பக்கங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்று வருவதாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தகவல் தெரிய வந்தது. இதனையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஆன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதில், நடிகர் சங்கத் தலைவர் நடிகர் நாசர் பெயரில் அடையாளம் தெரியாத நபர்கள், போலியாக எக்ஸ் வலைதளப் பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்களிடம் நிதி கேட்டு வசூலில் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பார்வையில் சங்கத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் போலியான விளம்பரம் கொடுத்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அளித்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பரங்கிமலை சைபர்கிரைம் பிரிவு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போலி எக்ஸ் வலைதளப்பக்கம் குறித்து காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டு அந்த விஷகிருமிகள் மீது நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்டு இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த உண்மைக்கு மாறான பொய்யான விளம்பரங்களை யாரும் நம்பவேண்டாம் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம் 1952 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கி வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தி சிவகுமாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்