இம்சை அரசன் படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுக்கு ரூ.9 கோடி அபராதம்?

இம்சை அரசன் படத்தில் நடிக்க மறுத்ததால் நடிகர் வடிவேல் ரூ.9 கோடி செலுத்த கெடு விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-03-01 23:15 GMT
‌ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23–ம் புலிகேசி படம் கடந்த 2006–ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. சிம்புத்தேவன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24–ம் புலிகேசி என்ற பெயரில் தயாரிக்க ‌ஷங்கர் திட்டமிட்டு அதில் நடிக்க வடிவேலுவை ரூ.1.50 கோடி சம்பள முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்தார்.

இந்த படத்துக்காக சென்னை அருகே ரூ.6 கோடி செலவில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை டைரக்டர் சிம்புத்தேவன் தொடங்கினார். ஆனால் திரைக்கதையில் தலையிடுவதாகவும், படக்குழுவினர் கொடுத்த உடைகளை அணிய மறுப்பதாகவும் வடிவேலு மீது புகார் கூறப்பட்டன. சிம்புத்தேவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்புக்கு செல்வதை வடிவேலு நிறுத்திக்கொண்டார். 

இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குனர் ‌ஷங்கர் புகார் அளித்தார். நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது. தற்போது இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர்கள் சங்கம் இறுதி முடிவு எடுத்துள்ளது. படப்பிடிப்பில் வடிவேலு கலந்துகொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அரங்கு அமைக்க படக்குழுவினர் செலவிட்ட ரூ.6 கோடியையும், அட்வான்ஸ் தொகையையும் சேர்த்து வட்டியுடன் ரூ.9 கோடியை அவர் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் கெடு விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இதைத்தொடர்ந்து அந்த படத்தில் நடிக்க வடிவேலு சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்