குளியலறை தொட்டியில் மூழ்க முடியுமா? ஸ்ரீதேவி மர்ம மரணம் குறித்து விசாரிக்க மும்பை போலீசில் புகார்

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார்.

Update: 2018-03-02 22:00 GMT
திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மரணம் இந்திய பட உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஸ்ரீதேவி தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் நேரிட்டது என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் குளியலறை தொட்டியில் நீரில் மூழ்கி இறந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது உடலில் மது அருந்தியதற்கான தடயம் இருந்ததாகவும் கூறப்பட்டது.

துபாய் போலீசார் ஸ்ரீதேவி கணவர் போனிகபூரிடமும், ஓட்டல் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி பின்னர் உடலை மும்பை கொண்டுவர அனுமதி அளித்தனர்.

இந்த நிலையில் குளியலறை தொட்டியில் எப்படி மூழ்கி இறக்க முடியும் என்று இணையதளங்களில் பலர் கருத்துகள் பதிவிட்டு வந்தனர். இந்தி பட உலகினரும் இதே கேள்வியை எழுப்பினார்கள்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் வற்புறுத்தி மும்பை போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

ஜெய்கோ பவுண்டேஷன் சட்டப்பிரிவு தலைவர் ஆதில் கத்ரி என்பவர் இந்த புகார் மனுவை மும்பை போலீஸ் கமிஷனர் தத்தாத்ரே பத்சாலிகருக்கு இ-மெயிலில் அனுப்பி வைத்துள்ளார்.

துபாய் போலீஸ் சொல்வதை நம்பாமல் ஸ்ரீதேவி மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான எஸ்.பாலகிருஷ்ணன் மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்நவிஸுக்கு இ-மெயிலில் புகார் அனுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்