சினிமாவில் நடிக்க மருத்துவ தொழிலை விட்டுவிட்டேன் - சாய் பல்லவி

சினிமாவில் நடிக்க மருத்துவ தொழிலை விட்டுவிட்டேன் என சாய் பல்லவி கூறினார்.

Update: 2018-03-25 23:30 GMT

மலையாளத்தில் வந்த ‘பிரேமம்’ என்ற ஒரே படத்திலேயே தென்னிந்திய திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் சாய்பல்லவி. நடிப்பு, கண் அசைவு, சிரிப்பு என்று ரசிகர்களை கிறங்க வைத்து இருந்தார். இந்த படத்துக்கு பிறகு அவருக்கு படங்கள் குவிகிறது. தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள ‘கரு’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படத்துக்கும் தனுஷ் ஜோடியாக மாரி இரண்டாம் பாகம் படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். மிஸ்கின் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். சினிமா அனுபவம் குறித்து சாய்பல்லவி அளித்த பேட்டி வருமாறு:-

“சிறுவயதிலேயே நடனம் கற்றுக்கொண்டேன். 2008-ல் தாம்தூம் படத்தில் கங்கனா ரணாவத் தோழியாக நடித்து இருக்கிறேன். கஸ்தூரிமான் படத்திலும் மீரா ஜாஸ்மின் தோழியாக வந்தேன். அதன் பிறகு எனது தந்தை சினிமா நிரந்தர தொழில் இல்லை. கதாநாயகிகள் 6 ஆண்டுகள் மட்டுமே நிலைத்து இருக்க முடியும். அதன் பிறகு ஓரம் கட்டிவிடுவார்கள் என்றார்.

படிப்புதான் முக்கியம் என்று சொல்லி ஜார்ஜியாவுக்கு டாக்டருக்கு படிக்க அனுப்பி விட்டார். அங்கு படித்துக் கொண்டு இருந்தபோது தான் ‘பிரேமம்’ பட வாய்ப்பு வந்தது. படிப்புக்கு பாதிப்பு வராமல் விடுமுறையில் மட்டும் நடிக்கும்படி பெற்றோர்கள் தெரிவித்தனர். அந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். முழு நேர நடிகையாகி விட்டதால் டாக்டர் வேலையை விட்டு விட்டேன். ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய கூடாது. அதுவும் மருத்துவ தொழில் உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் நடித்துக்கொண்டு டாக்டர் வேலை பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

இதனால் எனது பெயருக்கு பின்னால் கூட எம்.பி.பி.எஸ் பட்டத்தை சேர்த்துக்கொள்ளவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கிறது. கடவுள் அருள் இல்லாமல் இந்த இடத்துக்கு வந்து இருக்க முடியாது. எனக்கு பிடித்த நடிகர் சூர்யா. அவருக்கு ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என சாய் பல்லவி கூறினார்.

மேலும் செய்திகள்