‘ரோஜா’ மதுபாலா இப்போது..

‘ரோஜா’ சினிமாவில் ‘சின்னச்சின்ன ஆசை.. சிறகடிக்கும் ஆசை..’ பாடலுக்கு ஆடி, 28 வரு டங்களுக்கு முன்னால் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர், மதுபாலா.

Update: 2018-04-01 02:41 GMT
‘ரோஜா’ சினிமாவில் ‘சின்னச்சின்ன ஆசை.. சிறகடிக்கும் ஆசை..’ பாடலுக்கு ஆடி, 28 வரு டங்களுக்கு முன்னால் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர், மதுபாலா. பி்ன்பு இந்தியிலும் பிரபலமான அவர், தொழிலதிபர் ஆனந்த் ஷாவை திருமணம் செய்துகொண்டு, மும்பையில் வசதிபடைத்தவர்கள் வாழும் மலபார் ஹில்ஸ்சில் அரண்மனை போன்ற வீட்டில் வசித்து வருகிறார். மீண்டும் நடிக்க வந்திருக்கும் அவரது ஆனந்தமான மலரும் நினைவுகள்..

``எனது கணவர் ஆனந்த் ஷா பிரபலமான தொழிலதிபர். அவரது பெற்றோர் லண்டனில் வசிக்கிறார்கள். எங்களுக்கு அமேயா, கேயா ஆகிய இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு 12 வயது. இருவரும் லண்டனில் அவரது தாத்தா, பாட்டியோடு தங்கி, அங்கேயே படித்து வருகிறார்கள்.

ஆனந்த் நான் நடித்த ‘தில் ஜலே’ என்ற இந்திப் படத்தை சிங்கப்பூரில் பார்த்திருக்கிறார். அப்போதே என்னை அவருக்கு பிடித்துப்போய்விட்டது. அவரது நிறுவனத்திற்கு என்னை விளம்பரத் தூதர் ஆக்கவேண்டும் என்ற எண்ணத்தில் என்னோடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். பாலி தீவில் அதற்கான ஷூட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்பு என்னோடு இரவு உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஷூட்டிங் முடிவதற்கு முன்னால் நாங்கள் நெருங்கிவிட்டோம். திருமணம் செய்துகொள்ள விரும்பினோம். உடனே நான், இரண்டு வருடத்திற்குள் நான் சம்பந்தப்பட்ட காட்சிகளை எல்லாம் படமாக்கி முடித்துவிடும்படி எல்லா தயாரிப்பாளர்களுக்கும் கடிதம் எழுதினேன். புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் எல்லா படங்களிலும் நடித்து முடித்தேன். திருமணத்திற்கு பின்பு நான் நடிக்க விரும்பாமலே இருந்தேன்.

நான் நடிக்காமல் ஓய்வில் இருந்தபோது பியானோ வாசிக்க கற்றேன். நடனம், யோகா போன்றவைகளை செய்துவந்தேன். இப்போதும் நேரம் கிடைக்கும்போது கணவரது தொழிலுக்கு உதவி செய்கிறேன்.

நான் எவ்வளவோ படங்களில் நடித்தும், எல்லோரும் என்னை ரோஜா மூலம்தான் நினைவு கூருகிறார்கள். அதை நினைத்து முதலில் கோபப்பட்டேன். ஆனால் 28 வருடங்கள் கடந்த பின்பும் ரோஜாவை பற்றி மட்டும் பேசிக்கொண் டிருப்பது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. இப்போதும் ரோஜாவால்தான் ரசிகர்கள் என்னை அடையாளங்காண் கிறார்கள்.

நான் சினிமாவில் நடிக்க வந்தது ஒரு வித்தியாசமான அனுபவம். நடிகை ஹேமமாலினி எனது தந்தையின் சகோதரி மகள். ஒரு பத்திரிகையில் அவரது உறவினராக என்னை குறிப்பிட்டு, போட்டோவையும் வெளியிட்டு, நான் நடிக்க விரும்புவதாக அறிவித்திருந்தார்கள். டைரக்டர் கே.பாலசந்தர் அந்த போட்டோவை பார்த்துவிட்டு ஹேமமாலினியின் அம்மாவிடம் பேசியிருக்கிறார். அப்போது நாங்கள் மும்பையில் வசித்தாலும், கோடை விடுமுறையின் போதெல்லாம் நான் சென்னைக்கு வந்துவிடுவேன். அன்று நான் வியர்க்க விறுவிறுக்க கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது ஹேமாவின் அம்மா என்னிடம், ‘வா.. நாம் ஒரு இடம் வரை செல்லவேண்டும்’ என்று கூறி என்னை அதே உடையோடு அழைத்துச்சென்றார். அங்கு டைரக்டர் கே.பாலசந்தரை சந்தித்தோம். பார்த்ததும் அவருக்கு என்னை பிடித்துவிட்டது. மம்முட்டியுடன் அழகன் என்ற படத்தில் நடித்தேன். மும்பை சென்றதும் அடுத்த இந்திப் படத்தில் ஒப்பந்தமானேன்.

நடிகை ஜூகி சாவ்லா எனது கணவரின் நெருக்கமான உறவினர். அதனால் நான் ஜூகியோடு நெருக்கமான நட்பு வைத்திருக்கிறேன்.

நான் மும்பையில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தேன். அப்போது அதிக நாணம் கொண்ட பெண்ணாக இருந்தேன். கல்லூரி நிகழ்ச்சிகள் எதிலும் நான் கலந்துகொண்டதில்லை. என்னை நான் அழகான பெண்ணாக ஒருபோதும் கருதியதில்லை. தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாகவும் அப்போது நான் இருந்ததில்லை.

என் அம்மா பரதநாட்டிய கலைஞர். எனது தந்தை சினிமா தயாரிப்பாளர். அதனால் எங்கள் வீட்டிற்கு சினிமா நடிகர், நடிகைகள் அடிக்கடி வருவார்கள். அவர்களோடு எனக்கும் அறிமுகம் இருந்தது. அம்மா எனக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுத்தார். எனது 13 வயதில் அம்மா இறந்துபோனார். அப்பாவும், அவருடன் பிறந்தவர்களும் என்னை வளர்த்தார்கள்.

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு டைரக்டர் என் தந்தையிடம் பேசி என்னை நடிக்க அழைத்தார். நானும் சென்று நடித்தேன். மூன்று நாட்கள் கடந்த பின்பு அவர் எனக்கு நடிப்பு வரவில்லை என்று கூறி என்னை படத்தில் இருந்து நீக்கிவிட்டார். நான் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அழுதுவிட்டேன். கல்லூரியில் எல்லோரிடமும் நான் சினிமாவில் நடிப்பதாக கூறிவிட்டதால் எனக்கு அது பெரும் அவமானமாகிவிட்டது. அன்று முதல் நான் ஒவ்வொரு நாளும் என் டைரியில் ‘நான் நன்றாக நடித்து எனது திறமையை அந்த டைரக்டருக்கு நிரூபிப்பேன்’ என்று எழுதினேன். பின்பு நடிப்பு பயிற்சியும், நாட்டிய பயிற்சியும் பெற்றேன். கடவுளிடமும் பிரார்த்தித்தேன். அதன் பின்புதான் எனக்கு வரிசையாக படங்கள் ஒப்பந்தமாகின. நான் பிரபலமான நடிகையான பின்பு பல முறை அந்த டைரக்டர் என்னை சந்தித்தார். அவரிடம் ‘நான் பெரிய நடிகையாகிவிட்டேன் பார்த்தீர்களா..!’ என்று கேட்கவேண்டும் போல் தோன்றியது. ஆனாலும் அப்படி நான் கேட்கவில்லை.

ரோஜா வெற்றியடைந்த பின்பு எனக்கு சற்று கர்வம் கூடிவிட்டது. பல்வேறு மொழிகளில் இருந்து எனக்கு வாய்ப்பு வந்தது. அதனால் திரும்பிப்பார்க்க எனக்கு நேரமில்லை. பல நடிகர்கள் என்னோடு நடிக்க போட்டிபோட்டார்கள். இளம் வயது, வெகு பிரபலம், எல்லா படமும் வெற்றி என்பதால் நான் கர்வப்பட்டுவிட்டேன். பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்தேன். பின்புதான் நிதானித்து இயல்பு நிலைக்கு திரும்பினேன்''

மேலும் செய்திகள்