சினிமா மார்க்கெட்டுக்காக திருமணத்தை நடிகைகள் தள்ளிப்போட கூடாது - ராணி முகர்ஜி

சினிமா மார்க்கெட்டுக்காக திருமணத்தை நடிகைகள் தள்ளிப்போட கூடாது என ராணி முகர்ஜி கூறியுள்ளார்.

Update: 2018-04-02 22:15 GMT

பிரபல இந்தி நடிகை ராணிமுகர்ஜி. 1990-களிலும் 2000-லும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். பின்னர் இந்தி இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆதித்ய சோப்ராவை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘கிச்கி’ என்ற இந்தி படத்தில் நடித்தார். அந்த படம் கடந்த மாதம் வெளியாகி வசூல் குவித்தது. இதனால் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இதுகுறித்து ராணிமுகர்ஜி அளித்த பேட்டி வருமாறு:-

“திருமணமானதும் நடிகைகளை ஒதுக்கும் நிலைமை சினிமா துறையில் இருக்கிறது. அவர்களை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் படங்களையும் பார்க்க மாட்டார்கள் என்று புறக்கணிக்கிறார்கள். திருமணம் ஆகிவிட்டால் நாங்கள் நடிகை இல்லாமல் ஆகிவிடுவோமா? நடிப்பு மறந்து போகுமா? திருமணத்துக்கு பிறகும் நாங்கள் நடிகைகள்தான். கணவன், குடும்பம் என்று சொந்த வாழ்க்கைக்கு மாறினாலும் நடிப்பு திறமை போய்விடாது. அதை நான் நடித்துள்ள கிச்கி படம் நிரூபித்து உள்ளது. திருமணத்துக்கு பிறகு நான் நடித்த படம் என்பதற்காக ரசிகர்கள் ஒதுக்கவில்லை. வெற்றி பெற செய்து விட்டனர். திருமணம் ஆனதும் நடிகைகளுக்கு மார்க்கெட் போய் விடும் என்று நினைப்பது தவறு என்று கிச்கி மூலம் நிரூபணம் ஆகி உள்ளது.

திருமணம் ஆன நடிகைகளுக்கும் ரசிகர்கள் ஆதரவு இருக்கும். திருமணம் ஆனவரா? குழந்தை பெற்றவரா? என்றெல்லாம் சிந்திக்காமல் கதையையும் கதாபாத்திரத்தையும் மட்டும்தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். எனவே சினிமாவில் மார்க்கெட்டை நினைத்து பயந்து நடிகைகள் தங்கள் திருமணத்தை தள்ளிப்போடக்கூடாது. திருமணம் செய்து கொண்டு நடிக்கலாம்.” என ராணிமுகர்ஜி கூறினார்.

மேலும் செய்திகள்