நானும் சிறு வயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன் -நடிகை நிவேதா பெத்துராஜ்

நானும் சிறு வயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன் என நடிகை நிவேதா பெத்துராஜ் கூறி உள்ளார். #MeToo

Update: 2018-04-16 08:38 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. திரைத்துறையை சார்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவொன்றை நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ளார்.

அதில், தனக்கு 5 வயதில் பாலியல் தொல்லை நடந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நாட்டில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. அதில் ஒரு சில பிரச்சினைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதில் ஒன்று தான் பெண்கள் பாதுகாப்பு. ஆண்களும், பெண்களும், சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பார்கள். நானும் சிறு வயதில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன்.

 5 வயதில் நடக்கும் ஒன்றை நான் எப்படி அம்மா, அப்பாவிடம் எடுத்து சொல்லுவேன். அப்போது என்ன நடந்தது என்று கூட எனக்கு தெரியாது. பாலியல் தொல்லைகள் வெளியாட்கள் மூலம் நடப்பதில்லை. நமக்கு தெரிந்த உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமாகத்தான் நடக்கிறது. எனவே எல்லா பெற்றோர்களும் தயவு செய்து பொறுப்புடன் இருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு யார் எப்படி பேசினால் தப்பு?, எப்படி தொட்டால் தப்பு? என்று 2 வயதில் இருந்தே பேச ஆரம்பியுங்கள். குழந்தைகளுக்கு பள்ளியில் என்ன நடக்கிறது. 

டியூசனில் என்ன நடக்கிறது என்று நமக்கு தெரியாது. எனவே பாதுகாப்பு குறித்து அதிகம் சொல்லிக் கொடுங்கள். நாம் போலீசை நம்பியே இருக்க முடியாது. அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் குழுவாக இணைந்து உங்கள் தெருவில் என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். 

தவறு நடந்தால் தட்டிக் கேளுங்கள். தற்போது எனக்கு வெளியே சென்றாலே பயமாக இருக்கிறது. யாரை பார்த்தாலும் சந்தேகத்துடன் பார்க்க தோன்றுகிறது. பாலியல் துன்புறுத்தல் மிக தவறானது. இதனை அழித்தால் நாம் ஒரு அமைதியான இடத்தில் வாழலாம். இவ்வாறு அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் நிவேதா.

மேலும் செய்திகள்