சினிமா செய்திகள்
“சினிமா, சொந்த வாழ்க்கை பற்றி அனுஷ்கா”

அனுஷ்காவின் ‘பாகமதி’ படம் ஜனவரியில் வந்தது. கடந்த வருடம் வெளியான பாகுபலி-2, ஓம் நமோ வெங்கடேசாயா படங்களும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன.
அனுஷ்காவின் ‘பாகமதி’ படம் ஜனவரியில் வந்தது. கடந்த வருடம் வெளியான பாகுபலி-2, ஓம் நமோ வெங்கடேசாயா படங்களும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன. இந்த மூன்று படங்களுமே தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளி வந்தன. தற்போது புதிய படத்துக்கு கதை கேட்டு வருகிறார்.

அனுஷ்காவுக்கு உடல் எடை கூடியிருப்பதாகவும் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. எடையை குறைக்க உணவு கட்டுப்பாட்டில் இருந்து உடற்பயிற்சிகளும் செய்து வருகிறார். சினிமா வாழ்க்கை, சொந்த வாழ்க்கை குறித்து அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-

“நான் நடிப்பது சினிமாவில்தான். நிஜ வாழ்க்கையில் எனக்கு பிடித்த மாதிரி இருப்பேன். சொந்த வாழ்க்கைக்கும் சினிமா தொழிலுக்கும் ஒரு கோடு போட்டு வைத்து இருக்கிறேன். இரண்டையும் ஒன்றாக கலப்பது இல்லை. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நிறைய பேர் நீ நடிகையாகி விட்டாய். இனிமேல் பொது இடங்களுக்கு சாதாரண பெண்ணாக செல்லாமல் மேக்கப் போட்டு நல்ல ஆடைகளை உடுத்திக்கொண்டு செல் என்று ஆலோசனை கூறினர்.

நானும் அதை கடைபிடித்தேன். அவர்கள் சொன்ன மாதிரி மேக்கப் போட்டுக்கொண்டு சென்றேன். ஆனால் அது எனது உண்மையான சுபாவத்துக்கு விரோதமாக இருந்தது. அதன்பிறகு என்னை மாற்றிக்கொண்டு பிடித்தமாதிரி உடை அணிந்து செல்ல ஆரம்பித்தேன். அது எனக்கு சவுகரியமாக இருந்தது. படம் ஓடினால் திறமையானவர்கள் என்றும் ஓடாவிட்டால் திறமையற்றவர்கள் என்றும் சொல்ல முடியாது. வாழ்க்கையில் பிடித்தமாதிரி இருக்க வேண்டும். மற்றவர்களுக்காக போலியாக வாழ்வது பிடிக்காது.”

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.