சினிமா செய்திகள்
ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டதாக மீண்டும் புகார்

துபாயில் குளியலறையில் மூழ்கி இறந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.
நடிகை ஸ்ரீதேவியின் சாவில் மர்மம் உள்ளது என்றும், கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் வழக்குகள் தொடரப்பட்டு அவை தள்ளுபடி செய்யப்பட்டன.

தற்போது தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தும் ஓய்வுபெற்ற போலீஸ் உதவி கமி‌ஷனர் வேத் பூ‌ஷன் துபாய் ஓட்டலில் நேரில் ஆய்வு செய்துவிட்டு வந்து திட்டமிட்ட கொலை போல் இருக்கிறது என்று பரபரப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

‘‘குளியலறை தொட்டியில் ஒருவரை வேகமாக தள்ளி மூச்சு நிற்பதுவரை தண்ணீரில் அமுக்கி சாகடித்தால் தடயவியலில் அது இயற்கையான மரணம்போலத்தான் இருக்கும். ஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலைபோல் தெரிகிறது. துபாய் போலீசார் இரண்டு நாட்களுக்கு பிறகு வெளியிட்ட அறிக்கையில் ஸ்ரீதேவி உடலில் ஆல்கஹால் இருந்தது என்று குறிப்பிட்டனர். அது ஏற்கக்கூடியதாக இல்லை.

நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காத நிலையில் இந்த அறிக்கையை அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். நானே ஸ்ரீதேவி இறந்த துபாய் ஓட்டலுக்கு நேரில் சென்று விசாரித்தேன். ஸ்ரீதேவி தங்கி இருந்த அறையை ஒதுக்கி தரும்படி கேட்டேன். அதற்கு ஓட்டல் நிர்வாகத்தினர் மறுத்து விட்டனர். இதனால் ஸ்ரீதேவி இறந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கினேன்.

அங்கிருந்து மரணம் எப்படி நடந்து இருக்கும் என்று ஆராய்ச்சி செய்து பார்த்தேன். அப்போது ஏதோ சில வி‌ஷயங்கள் மறைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் உள்ளது. நிறைய கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டி உள்ளது.’’

இவ்வாறு அவர் கூறினார்.