சினிமா செய்திகள்
சொந்த வீடு வாங்கிய மகிழ்ச்சியில் டாப்சி

சொந்த வீடு வாங்கிய மகிழ்ச்சியில் இருக்கிறார் டாப்சி.
இந்தி நடிகர்-நடிகைகள் அனைவருக்குமே மும்பையில் ஆடம்பரமான வீடு இருக்கிறது. சினிமாவில் புதிதாக வரும் நடிகைகளுக்கும் அங்கு வீடு வாங்க வேண்டும் என்பதே கனவாக இருக்கும். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளாக இருக்கும் பலர் மும்பை அடுக்குமாடி குடியிருப்புகளில் சொந்தமாக வீடு வைத்துள்ளனர்.

மும்பைக்கு செல்லும்போது அங்குதான் தங்குகிறார்கள். டாப்சிக்கு இப்போது இந்தி படங்கள் குவிகிறது. அமிதாப்பச்சனுடன் நடித்த பிங்க் படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டார். அக்‌ஷய்குமாருடன் நடித்த நாம் சபானா படமும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனால் தமிழ், தெலுங்கு படங்களை குறைத்துக் கொண்டு இந்தியிலேயே கவனம் செலுத்துகிறார். இப்போது 3 இந்தி படங்கள் கைவசம் உள்ளன.

அதோடு மும்பையில் சொந்தமாக வீடு வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார். அது இப்போது நிறைவேறி இருக்கிறது. பல கோடி விலையில் ஆடம்பர வீடு வாங்கி இருக்கிறார். இதுகுறித்து டுவிட்டரில் அவர், “மும்பையில் வீடு வாங்க வேண்டும் என்பது எனது பெரிய கனவாக இருந்தது. அது இப்போது நிறைவேறி இருக்கிறது” என்று கூறியுள்ளார். சொந்த வீடு வாங்கிய டாப்சிக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.