சினிமா செய்திகள்
``பூமராங் படப்பிடிப்பை 45 நாட்களில் முடித்து விட்டோம்'' -டைரக்டர் ஆர்.கண்ணன்

அதர்வா-மேகா ஆகாஷ் ஜோடியுடன் வளர்ந்து வரும் படம், `பூமராங்.' இதில், இந்துஜா முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். ஆர்.கண்ணன் டைரக்டு செய்திருக்கிறார்.
படத்தை பற்றி டைரக்டர் ஆர்.கண்ணன்  சொல்கிறார்:-

``ஒரு படத்தை இயக்குவதில் மிகவும் சவாலான விஷயம், நல்ல கருத்தை கதையாக்குவதுதான். அடுத்து நல்ல நடிகர்களை படத்துக்குள் கொண்டு வருவது. இவையெல்லாம் தாண்டி மிகவும் முக்கியமான ஒரு விஷயம், பட தயாரிப்பு செலவை அதிகரித்து ஆடம்பரமாக மாற்றாமல், தயாரிப்பாளரை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்பது. இதெல்லாம் `பூமராங்' படத்தில் இருக்கிறது.

`பூமராங்' படத்தின் திரைக்கதையை எழுதி முடித்ததும் படத்தை முடிக்க 90 நாட்கள் தேவைப்படும் என்பது தெளிவாக தெரிந்தது. 4 மொழிகளில் வருகிற படம் என்பதால் ஒரு நாளைக்கு 2 காட்சிகளையே படமாக்க முடிந்தது. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகிய மூன்று பேரின் ஒத்துழைப்பை குறிப்பிட வேண்டும். அவர் களின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க முடிந்தது.

இந்த படத்தை பொருத்தவரை, முழு படமும் அதர்வாவை சார்ந்தது. அவரிடம் இருந்து மூன்று வித்தியாசமான தோற்றங்கள் படத்துக்கு தேவைப்பட்டது. அவருக்கு `மேக்கப்' போடுவதற்கே 4 மணி நேரம் தேவைப்பட்டது. இந்தி நடிகர் உபென் படேல், படத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார். சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சென்னை, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. ஒரு பாடல் காட்சியும் அங்கேயே படமாக்கப்பட்டது.''