சுகாதார துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு: விஜய் புகைப்பிடிப்பதை முகப்பு படங்களாக மாற்றிய ரசிகர்கள்

சுகாதார துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைத்தளங்களில் விஜய் புகைப்பிடிப்பதை முகப்பு படங்களாக ரசிகர்கள் மாற்றி வருகின்றனர்.

Update: 2018-07-08 22:30 GMT
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியானது. அதில் விஜய் ஸ்டைலாக புகைப்பிடிப்பது போன்ற காட்சி இருந்தது. இந்த படம் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆனது. ரசிகர்கள் சுவரொட்டியாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டினார்கள்.

இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. விஜய் புகைப்பிடிப்பது இளைஞர்களை புகைப்பிடிக்க தூண்டுவதுபோல் உள்ளது என்று கண்டித்தனர். எனவே அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். பா.ம.க. உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் விஜய் புகைப்பிடிக்கும் போஸ்டரை எதிர்த்தன.

இந்த நிலையில் தமிழக பொது சுகாதார துறை விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை நீக்கும்படி விஜய்க்கும், ஏ.ஆர்.முருகதாசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. புகைப்படிக்கும் விஜய் படத்தை சமூக வலைத்தளத்தில் இருந்தும், இணையதளத்தில் இருந்தும் உடனே நீக்க வேண்டும் என்றும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

புகைப்பழக்கத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திரைத்துறையினர் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து புகைப்பிடிக்கும் விஜய்யின் சர்ச்சை படம் நீக்கப்பட்டது.

சுகாதார துறை நடவடிக்கைக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் விஜய் புகைப்பிடிப்பதை முகப்பு படங்களாக வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இணையதளங்களிலும் அந்த படத்தை பரப்பி வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளியான படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் உள்ளன. ஆனால் விஜய்க்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையது அல்ல என்று டுவிட்டரில் அவர்கள் பேசி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்