சினிமா செய்திகள்
நடிகர் சல்மான்கான் உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார்

மத்திய மந்திரி சவாலை ஏற்று நடிகர் சல்மான்கான் உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார்.
உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள வலியுறுத்தும் ‘பிட்னஸ் சேலஞ்ச்’ விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தொடங்கி வைத்தார். இந்த சவாலை ஏற்று பிரபலங்கள் பலர் உடற்பயிற்சி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

நடிகைகள் தீபிகா படுகோனே, அலியாபட் ஆகியோரும் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டனர். இந்தி நடிகர் சல்மான்கானுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜு சவால் விடுத்து இருந்தார். அந்த சவாலை ஏற்று தனது உடற்பயிற்சி வீடியோவை நடிகர் சல்மான்கான் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

உடற்பயிற்சி கூடத்தில் சல்மான்கான் உடற்பயிற்சி செய்வது மற்றும் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. தனது சவாலை ஏற்று உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட சல்மான்கானுக்கு மந்திரி கிரண் ரிஜிஜு நன்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ மூலம் கோடிக்கணக்கான மக்கள் ஆரோக்கியமாக வாழ ஊக்குவித்து இருக்கிறீர்கள் என்றும் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.